புதுடெல்லி: நிலமோசடி வழக்கில் லாலு பிரசாத் யாதவின் மகனும், பிகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவுக்கு சிபிஐ இரண்டாவது முறையாக இன்று சம்மன் அனுப்பியுள்ளது.
ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் இருந்தபோது, ரயில்வேயில் வேலை வழங்கும் விவகாரத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புலனாய்வு அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. குறிப்பாக, வேலை பெற்றவர்கள் தங்களின் நிலங்களை பரிசாக அல்லது குறைந்த விலைக்கு, லாலுவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பினாமிகளின் பெயர்களுக்கு எழுதித் தந்திருப்பதாகவும், இதன்மூலம் பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக லாலு பிரசாத் யாதவ் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக பாட்னா மற்றும் டெல்லியில் உள்ள லாலு பிரசாத் யாதவின் வீடு உள்ளிட்ட 24 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவின் டெல்லி வீட்டிலும் இந்த சோதனை நடந்தது. நேற்றைய சோதனையில், ரூ. 53 லட்சம் ரொக்கம், 540 கிராம் தங்கம், 1.5 கிலோ தங்க நகைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக தேஜஸ்வி யாதவிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ள சிபிஐ, அவருக்கு கடந்த மாதம் 4ம் தேதி சம்மன் அனுப்பியது. எனினும், விசாரணைக்கு தேஜஸ்வி யாதவ் ஆஜராகவில்லை. இதையடுத்து, சிபிஐ இன்று மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.