கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னையிலிருக்கும் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்ட ஒரு நபர் ஈரோடு பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் ஆகியவற்றில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தார். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் அவசர நிலையில் இதற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
ஈரோடு காவல்துறை சூப்பர் ரயில்வே போலீஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்ட காவலர்கள் பேருந்து நிலையத்திலும் ரயில் நிலையத்திலும் தீவிரமான சோதனையை நடத்தினர். அப்பகுதிகளில் ஒன்று விடாமல் எல்லா இடங்களிலும் தீவிரமாக சோதனை நடத்தப்பட்டது.
ரயில்வே பிளாட்பாரம் சரக்கு பாதுகாப்பு பகுதி என ஒன்று விடாமல் தீவிரமாக போலீசாரும் ரயில்வே காவல்துறையினரும் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து எங்கும் தேடியும் வெடிகுண்டு கிடைக்காததால் இது புரளி என்பது உறுதியானது. இந்நிலையில் இது தொடர்பாக காவல் நிலையத்தை தொடர்பு கொண்ட மர்ம நபரை தீவிரமாக தேடி வந்தது காவல்துறை, அவர் தற்போது திருப்பூரில் வைத்து கைது செய்யப்பட்டு இருக்கிறார். காவல்துறையின் விசாரணையில் அவர் பெயர் சந்தோஷ் குமார் (34) என்பது தெரிய வந்திருக்கிறது.
இவரை திருப்பூர் போலீசார் ஈரோடு டவுன் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். 34 வயதான அந்த இளைஞரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சிறைக்கு சென்றால் மூன்று வேலை உணவு கிடைக்கும் என்பதால் இவ்வாறு செய்ததாக தெரிவித்திருக்கிறார். வறுமையின் பிடியினால் சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்டு வந்ததாக கூறியிருக்கும் அவர் இதேபோன்று மூன்று முறை மிரட்டல் கொடுத்ததாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.