கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தீ விபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சூரியகுமார் என்ற சிறுவன் பலத்த தீக்காயம் அடைந்தார். இதையடுத்து அருகிலுள்ளவர்கள் அந்த சிறுவனை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் இந்த சிறுவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஓமந்தூரார் பன்நோக்கு மருத்துவமனை கூட்டரங்கிற்கு வரவழைத்து பாராட்டுகளைத் தெரிவித்தார். மேலும் அந்த சிறுவனிடமும் உடல்நலம் குறித்து விசாரித்தார்.
அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் பேசியதாவது:- “சிறுவன் சூரியகுமாரின் குடும்பத்தினர்கள் சென்னையில் தங்கி சிகிச்சை பெறுவதற்கு வசதியாக என்னுடைய சட்டமன்ற உறுப்பினர் விடுதியை வழங்கினேன். அதன் படி, அவர்கள் அந்த விடுதியில் கடந்த ஓராண்டாக தங்கி சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த சிறுவனுக்கு காது, கைகளில் அறுவை சிகிச்சையும், அடி வயிற்று ஒட்டுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. தற்போது, சிறுவன் தனது சுய தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் அளவிற்கு உடல்நலம் தேறி வந்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 36 ஆயிரம் என்ற அளவில் உச்சத்தை தொட்டிருந்த நேரத்தில், முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மிகவும் சிறப்பாக செயல்பட்டது.
தற்போது உருவெடுக்கும் இன்புளுயன்சா காய்ச்சலை தடுக்கும் வகையில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் தமிழ்நாடு முழுவதும் 1,558 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்கள் நடமாடும் மருத்துவமனைகளை கொண்டு தொடர்ந்து நடத்துவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.