திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே ஓட்டுநருடன் லாரியை கடத்தி 12 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்தவர் 54 வயது பாலகிருஷ்ணன். லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் ஓசூரில் இருந்து தக்காளி லாரி ஏற்றிக்கொண்டு திருநெல்வேலியில் இறக்கிவிட்டார். பின்னர் அங்கிருந்து தக்காளி விற்பனை செய்த பணம் ரூ.11 லட்சத்து 65 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவருடன் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்ற மற்றொரு டிரைவர் உடன் வந்துள்ளார்.
இவர்கள் திண்டுக்கல் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் திண்டுக்கல் அருகே உள்ள காமாட்சிபுரம் பிரிவு அருகே லாரியை இன்று அதிகாலை ஓட்டி வந்து கொண்டிருந்த போது இவர்களது லாரியை கருப்பு நிற யுனோவா கார் ஒன்று இடைமறித்தது. அதில் இருந்து இறங்கிய 6 நபர்கள் லாரியின் ரிவர் வியூ கண்ணாடியை உடைத்தனர். அதன் பின்னர் காரில் வந்தவர்களில் 4 நபர்கள் மட்டும் ஆயுதங்களுடன் லாரிக்குள் ஏறி கொண்டனர். பின்னர் லாரியில் பாலகிருஷ்ணன் மற்றும் சதீஷ்குமாரை ஆயுதங்களால் தாக்கி கொண்டே லாரியை திண்டுக்கல் மாவட்ட எல்லை பகுதியான விடுதலை பட்டிக்கு ஓட்டிச் சென்றுள்ளனர்.
மற்ற இரு நபர்கள் லாரியை பின்தொடர்ந்து தங்களது யுனோவா காரில் வந்துள்ளனர். அதன்பின்னர் லாரியை விடுதலைப்பட்டி பிரிவு அருகே நிறுத்திவிட்டு தக்காளி விற்பனை செய்து வைத்திருந்த 11 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய், லாரி சாவி, டிரைவர் இருவரது செல்போன்கள் ஆகியவற்றை பறித்துக்கொண்டு கும்பல் தப்பிவிட்டது. மர்ம கும்பலால் தாக்கப்பட்டு காயமடைந்த லாரி டிரைவர் பாலகிருஷ்ணன் மற்றும் சதீஷ்குமார் கல்வார்பட்டி பிரிவு அருகே நெடுஞ்சாலைக்கு வந்து போலீசாரிடம் நடந்த விவரம் குறித்து புகார் தெரிவித்தனர்.
ரோந்து போலீசார் இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லாரியுடன் டிரைவரை கடத்தி ரூ.11 லட்சத்து 65 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளை கும்பலை பிடிக்க 3 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.