சர்வதேச அளவில் ஏற்படும் பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் வட்டி விகிதங்களால் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக அமெரிக்காவிலுள்ள கார்ப்பரேட் நிறுவனத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்ட நிலையில், பணி நீக்க நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.

கடந்த சில மாதங்களில் கூகுள், மைக்ரோசாப்ட், டெல், ட்விட்டர், ஃபேஸ்புக், டிஸ்னி, அமேசான், வால் ஸ்டிரீட் உள்பட பல நிறுவனங்களும் முதல் கட்ட ஆள்குறைப்பை மேற்கொண்டுள்ளன. 2023 –ம் ஆண்டில் மட்டும் இதுவரை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டி உள்ளது. ஃபேஸ்புக் இப்போது இரண்டாவது கட்ட ஆள்குறைப்பை அறிவித்துள்ளது.
ஃபேஸ்புக் மெட்டா நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் 11 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இப்போது, மேலும் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இது ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிதிநிலையை சீர் செய்யும் நடவடிக்கையால், மெட்டா நிறுவனத்தின் 18 ஆண்டுகள் வரலாற்றில் இல்லாத வகையில் ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது. இந்தமுறை பொறியியல் பிரிவுகளை சேராத ஊழியர்களையும் பணிநீக்கம் செய்ய உள்ளது. இந்த நடவடிக்கை மென்பொருள் சார்ந்த பணியாளர்கள் மத்தியில் பணி தொடர்பான அச்சத்தை அதிகரித்துள்ளது.

ஃபேஸ்புக் மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் இதுகுறித்து கூறுகையில், “எங்கள் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை ஈடுகட்டும் நோக்கில் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளோம். நிறுவனத்தை மறுகட்டமைப்பு செய்யவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன்காரணமாக அதிக அளவிலான பணியாளர்களை நீக்க 2-வது முறையாக நடவடிக்கையை மேற்கொள்கிறோம். மேலும், நிறுவனத்தில் புதிதாக 5 ஆயிரம் பேரை பணியில் அமர்த்த திட்டமிட்ட நடவடிக்கைகளையும் கைவிடுகிறோம்” என்றார்.