பாஜக நிர்வாகிக்கு செக் மோசடி வழக்கில் நீதிமன்றம் 2 ஆண்டுகளை சிறை தண்டனை விதித்துள்ளது.
தூத்துக்குடி முத்து கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் பா.ஜ.கவின் மாநில பொருளாதார பிரிவு செயலாளர் வி. எஸ். ஆர் பிரபு என்பவருடன் நட்பாக இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2012ஆம் ஆண்டு பிரபு அவசர தேவைக்காகப் பரமசிவத்திடம் ரூ. 5 லட்சம் கடனாகக் கேட்டுள்ளார். பணத்தை இரண்டே மாதத்தில் திருப்பி தந்து விடுவதாகவும் உறுதி அளித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து பரமசிவம் ரூ.5 லட்சத்தை பிரபுவிடம் வழங்கியுள்ளார். பின்னர் இரண்டு மாதம் கழித்து அவரிடம் பிரபு இதற்காக இரண்டு வங்கி காசோலைகளை வழங்கி உள்ளார். இந்த காசோலையைச் செலுத்திய போது வங்கியில் பணம் இல்லை என தெரியவந்தது.
பிரபு தம்மை மோசடி செய்துள்ளார் என்பதை உணர்ந்த பரமசிவம் தூத்துக்குடி விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 11 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில் வழக்குத் தொடுத்த பரமசிவத்திற்கு ரூ. 5 லட்சத்துடன், வழக்கு செலவு சேர்த்து ரூ.10 லட்சம் பணத்தை ஒரே மாதத்திற்குள் வழங்க வேண்டும் எனவும் மேலும் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் பிரபுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க மாநில நிர்வாகி ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.10 லட்சம் அபராதமும் வழங்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
newstm.in