16 வயது சிறுமியை கடத்திச் சென்ற இளைஞரை சென்னையில் மடக்கிப் பிடித்து தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாண்டூர் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் கடந்த மாதம் திடீரென மாயமானார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாயமான சிறுமி குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த மதியழகன்(23) என்பவர் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி கடத்திச் சென்றதும், அவர்கள் சென்னையில் இருப்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்தது. இந்நிலையில் உளுந்தூர்பேட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு உத்திரவின் பேரில், தனிப்படை போலீசார் மதியழகனை முடக்கிப்பிடித்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சிறுமியை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.