காட்டிற்குச் சிங்கத்தைப் போல, கடலுக்கு நீல திமிங்கலம். தன்னுடைய அபார தோற்றத்தால் கடலை கட்டி ஆளும் நீல திமிங்கலம் 200 டன் எடை கொண்டவை. இந்த எடை 33 யானைகளுக்குச் சமம்.

ஆச்சர்யமூட்டும் பதிவுகளை சமூக வலைதளத்தில் பதிவிடும் ஹர்ஷ் கோயங்கா என்பவர், சமீபத்தில் நீல திமிங்கலத்தின் இதயத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். கனடாவின் ராயல் ஆன்டரியோ அருங்காட்சியகத்தில் நீல திமிங்கலத்தின் பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படும் இதயம் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இவரின் ட்விட்டர் பதிவில், “181 கிலோ எடையுள்ள நீல திமிங்கலத்தின் பாதுகாக்கப்பட்ட இதயம். இது 1.2 மீட்டர் அகலமும், 1.5 மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் அதன் இதயத் துடிப்பு 3.2 கிமீ தொலைவில் இருந்து கேட்கும்’’ என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
`2014 -ல் கனடாவின் மேற்கு நியூஃபவுண்ட்லேண்டில் உள்ள ராக்கி துறைமுகத்தின் கடற்கரையில், ஒரு பெண் நீலத் திமிங்கலத்தின் சடலம் கரை ஒதுங்கியது. இதயத்தை மார்பு குழியிலிருந்து, விலா எலும்புகளை விரித்து வெளியே எடுக்க நான்கு ஊழியர்கள் தேவைப்பட்டனர்.
This is the preserved heart of a blue whale which weighs 181 kg. It measures 1.2 meters wide and 1.5 meters tall and its heartbeat can be heard from more than 3.2 km away. pic.twitter.com/hutbnfXlnq
— Harsh Goenka (@hvgoenka) March 13, 2023
அதிர்ஷ்டவசமாக, அதன் உடல் நல்ல நிலையில் இருந்ததால், ராயல் ஆன்டரியோ அருங்காட்சியகத்தில் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள் திமிங்கலத்தின் இதயத்தைப் பாதுகாக்க உதவினார்கள்.
2017-ம் ஆண்டு பாதுகாக்கப்பட்ட திமிங்கலத்தின் இதயம் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது’ என திமிங்கலத்தின் இதயத்தைப் பாதுகாக்கும் முயற்சிக்குத் தலைமை தாங்கிய ஜாக்குலின் மில்லர் தெரிவித்துள்ளார்.