கருப்பு பணத்தை ஒழிப்பதாகப் பணமதிப்பிழப்பு நடவடிக்கை 2016 டிசம்பர் மாதத்தில் கொண்டு வரப்பட்டது. 500 மற்றும் 1000 ரூபாய்களுக்குத் தடை விதிக்கப்பட்டு, புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. 20, 50,100 மற்றும் 2,000 என புதிய நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டது.

ஆனால் வெகு காலமாகவே இந்த 2,000 ரூபாய் நோட்டுகள் மக்களிடையே புழக்கத்தில் இல்லை. அடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் என்ன ஆனது, புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகள் யாரிடம் உள்ளது என்ற பல கேள்விகள் மக்களிடையே உள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பான இரண்டாவது அமர்வில், 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது 2019-ம் ஆண்டிலேயே நிறுத்தப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து மாநிலங்களவையில் பேசிய நிதித்துறை இணையமைச்சர், “புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடும் திட்டம் ஏதுமில்லை. தற்போது புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளே போதுமானது என அரசு மதிப்பிட்டுள்ளது” என்றார்.
புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிடும் திட்டம் ஏதுமில்லை என்று கூறினாலும், 2,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அரசு மீண்டும் தெரிவிக்குமா என்ற ஐயம் மக்களிடையே எழுந்துள்ளது.