சென்னை: இபிஎஸ் புகைப்படத்தை எரித்தவர் நேற்று இரவு பாஜகவில் இருந்து நீக்கப்பட்டு, இன்று காலையில் மீண்டும் பாஜகவில் சேர்க்கப்பட்டார்.
பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் ஒரு சிலர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அத்துடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது பகிரங்க குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகின்றனர். இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் எடப்பாடி பழனிசாமியின் படத்தை எரித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த புகைப்பட எரிப்பு போராட்டம், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் தினேஷ் ரோடி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் நேற்று (மார்ச் 15) அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் மாவட்ட மையக்குழுவின் ஒப்புதலோடு கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கு முரணாக செயல்பட்டதோடு மட்டுமல்லாமல், தன்னிச்சையாக நடந்து கொண்ட வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் தினேஷ் ரோடி கட்சிக்கான அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலக்கி வைக்கப்படுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், இன்று (மார்ச்.16) காலையில் தினேஷ் ரோடி மீதான நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக பாஜக மாநில பொதுச் செயலாளர் பொன்.பாலகணபதி அறிவித்துள்ளார். இதன்படி இரவில் நீக்கம் செய்யப்பட்டு காலையில் மீண்டும் சேர்க்கப்பட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.