பா.ஜ.க ஐ.டி. பிரிவு மாநிலத் தலைவர் நிர்மல்குமார், செயலாளர் திலீப் கண்ணன் உள்ளிட்ட சிலர், கடந்த சில நாள்களுக்கு முன்பு பா.ஜ.கவில் இருந்து விலகி, அ.தி.மு.க.,வில் இணைந்தனர். இதனைடுத்து, கூட்டணி தர்மத்தை மீறி பா.ஜ.க., நிர்வாகிகளை அ.தி.மு.க.,வில் இணைப்பதைக் கண்டித்து, மாநிலம் முழுவதும் பா.ஜ.கவினர் அ.தி.மு.கவிற்கு எதிராகப் போராட்டங்களை நடத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அ.தி.மு.கவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை பாஜக நிர்வாகிகள் சிலர் தீயிட்டு எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி சார்பில் எடப்பாடி பழனிசாமியைக் கண்டித்து கோவில்பட்டி நகர் முழுவதும் போஸ்டர்களும் ஒட்டப்பட்டன. இதனைத் தொடர்ந்து, பா.ஜ.க நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுக-வினர் புகார் அளித்தனர்.
இந்த நிலையில், பாஜகவின் ஓ.பி.சி. பிரிவு தூத்துக்குடி வடக்கு மாவட்ட துணைத் தலைவர் கோமதி, பா.ஜ.கவில் இருந்து வலகி, முன்னாள் கோவில்பட்டி தொகுதியின் அ.தி.மு.க எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ முன்னிலையில் அ.தி.மு.கவில் இணைந்தார். அந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை கடுமையாகச் சாடினார் கடம்பூர் ராஜூ. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜ.கவின் இளைஞரணி தலைவர் தினேஷ் ரோடி கட்சியில் இருந்து 6 மாத காலத்திற்கு தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக அக்கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் நேற்றிரவு அறிக்கை மூலம் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், இன்று அதிகாலையில் தினேஷ் ரோடி மீதான நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாகவும், அவர் அவருடைய பதவியில் தொடருவதாகவும் பா.ஜ.கவின் மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். பா.ஜ.க இளைஞரணி நிர்வாகி, கட்சியிலிருந்து இரவில் நீக்கம் செய்யபட்டு அதிகாலையில் நீக்கப்பட்டது ரத்து செய்யப்பட்டு மீண்டும் இணைக்கப்பட்ட சம்பவம் தூத்துக்குடி மாவட்ட பா.ஜ.கவினர் மத்தியில் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது