குன்றத்தூர்: குன்றத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து முருகன் கோயிலுக்கு செல்லும் பிரதான சாலையில் மக்கள் நடந்து செல்லும் நடைபாதை மற்றும் ஆக்கிரமிப்புகள் கடைகள் இடித்து அகற்றுவதற்கு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். அவர்களுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர். குன்றத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து முருகன் கோயிலுக்குச் செல்லும் பிரதான சாலையின் இருபுறமும் ஏராளமான கடைகள் உள்ளன. மேலும், பிரதான சாலையை ஒட்டிய பாதசாரிகள் நடந்து செல்வதற்கு நடைபாதை அமைக்கப்பட்டு இருந்தது. நாளடைவில், இந்த நடைபாதைகளை அங்குள்ள கடைக்காரர்கள் ஆக்கிரமித்து, தங்களது விற்பனை பொருட்களை வைத்தனர். மேலும் பலர் நடைபாதையை இடித்து அகற்றி, அதில் தங்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு சாய்தள பாதை அமைத்து ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்துள்ளனர்.
மேலும் பல்வேறு சாலையோர கடைகளும் நடைபாதையை ஆக்கிரமித்து செயல்பட்டு வந்துள்ளன. இதனால் பாதசாரிகள் நடைபாதையில் நடந்து செல்ல முடியாமல், பிரதான சாலையில் இறங்கி வாகன நெரிசலுக்கு இடையே கடந்து செல்லும் அவலநிலை நீடித்தது. இதில் பலர் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் சம்பவங்களும் அதிகரித்தன. குறிப்பாக, குன்றத்தூர் பிரதான சாலையில் உள்ள கடை உரிமையாளர்களில் பலர், வாடிக்கையாளர்கள் நிற்கும் வகையில் இருக்கையுடன் கூடிய கூடாரங்கள் அமைப்பது என பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டு, நெடுஞ்சாலை மற்றும் நகராட்சிக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து வைத்திருந்தனர். இதனால் பிரதான சாலையின் பரப்பளவு வெகுவாக குறைந்து, இந்த சாலைகளில் பயணிக்கும் கனரக வாகனங்கள் முதல் அனைத்து வாகனங்களும் ஊர்ந்து செல்லும் அவலநிலையே இருந்து வந்தது.
அதுமட்டுமின்றி, அவசர ஊர்தி வாகனங்களான ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு உள்ளிட்ட உயிர் காக்கும் வாகனங்கள்கூட, தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு இந்த பிரதான சாலையில் விரைவாக செல்ல முடியாத நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அங்கு எந்நேரமும் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வந்தது. இதனால் குன்றத்தூர் பிரதான சாலையின் இருபுறமும் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வலியுறுத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து முதல் கட்டமாக, கடந்த வாரம் குன்றத்தூர் நகராட்சி சார்பில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதில் ஒருசில வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து, சாலையை ஆக்கிரமித்து வைத்திருந்த தங்களது கடையின் விளம்பர பதாகைகள் மற்றும் முன்பக்க கூரைகளை அகற்றினர்.
இந்நிலையில், குன்றத்தூர் பிரதான சாலையில் அகற்றப்படாமல் இருந்த நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை நேற்று குன்றத்தூர் நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலை துறை மற்றும் போலீசார் இணைந்து, ஜேசிபி இயந்திரங்கள் மூலம் 100க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றும் பணி நடைபெற்றது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அங்கு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வருங்காலங்களில் குன்றத்தூர் பகுதியில் பிரதான சாலைகளை ஆக்கிரமிப்போர் மீது அபராதம், வழக்கு உள்பட பல்வேறு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நகராட்சி சார்பில் எச்சரிக்கை விடப்பட்டது. நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றிய பிறகு, குன்றத்தூர் பிரதான சாலையில் அனைத்து வாகனங்களும் எளிதாக சென்று வந்தன. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.