சென்னை: மார்ச் 17 முதல் 19-ம் தேதி வரை, தமிழகத்தில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள், மின்னல் தாக்கத்தின்போது திறந்தவெளியில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தமிழ்நாடு வட உள்பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 17.03.2023 முதல் 19.03.2023 வரை, தமிழக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள், மின்னல் தாக்கத்தின்போது திறந்தவெளியில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். மரங்கள் மற்றும் உலோக கட்டமைப்புகளின் கீழ் நிற்கக் கூடாது. நீச்சல் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் .
திறந்த வெளியில் இருக்க நேரிட்டால், இடி மின்னலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள குதிகால்களை ஒன்று சேர்த்து, தலை குனிந்து, தரையில் பதுங்குவது போல அமர்ந்து கொள்ள வேண்டும். தரையை ஒட்டி அமர்வதால், மின்னலின் தாக்கம் குறைவாக இருக்கும். தரையில் சமமாக படுக்கக் கூடாது. எனவே, இடி, மின்னலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.