நாமக்கல்: கூகுள் பே மூலம் தலா ரூ.35,000 லஞ்சம் – சுகாதார பணிகள் மாவட்ட துணை இயக்குநர் மீது வழக்கு

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநராக பிரபாகரன் என்பவர் பணியாற்றி வருகிறார். இதே அலுவலகத்தில் முத்துமணி என்பவர் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். மாணிக்கம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல் நோக்கு பணியாளராக பணியாற்றி, தற்போது பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள சக்திமுருகன் என்பவரும் இந்த அலுவலகத்திற்கு அடிக்கடி வந்து செல்வதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மாநில அளவிலான கலந்தாய்வின் அடிப்படையில் கடந்த 26.7.2021 முதல் 30.7.2021 வரை அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் புணிபுரியும் ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர்களை அவர்களின் விருப்பத்தின் பேரில் இடமாற்றம் செய்ய சென்னை மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார பணிகள் இயக்குநர் உத்தரவிட்டார்.

இதன் அடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரிந்த 76 ஒப்பந்த செவிலியர்கள் பல்வேறு இடங்களுக்கு இடமாறுதல் உத்தரவு பெற்றனர். இந்த நிலையில், நாமக்கல் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் பிரபாகரன், சுகாதார ஆய்வாளர் முத்துமணி மற்றும் சக்திமுருகன் ஆகியோர், கலந்தாய்வு மூலம் இடமாறுதல் பெற்ற ஒப்பந்த செவிலியர்களை , தற்போது பணிபுரியும் இடங்களில் இருந்து விடுவிக்க ரூ. 25,000 முதல் ரூ. 35,000 வரை ஒவ்வொருவரிடமும் லஞ்சம் கேட்டதாகச் சொல்லப்படுகிறது. பணம் கொடுத்த செவிலியர்களை உடனே பணியில் இருந்து விடுவித்ததாகவும், மாறாக பணம் கொடுக்காத செவிலியர்களை பணியில் இருந்து விடுவிக்காமல் இழுத்தடித்து வந்ததாகவும் தெரிகிறது. லஞ்சம் தரவிரும்பாக செவிலியர்களில் சிலர், இதுபற்றி நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பிரபாகரன்

இது குறித்து கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி சுபாஷினி, ஆய்வாளர் நல்லம்மாள் ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது, ஒப்பந்த அடிப்படையில் பரமத்தி வேலூர் தாலுகா வெங்கரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிய ஒரு செவிலியர், தேனி மாவட்டம், அல்லி நகரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கலந்தாய்வு மூலம் இடமாறுதல் பெற்றதும், அவரை இந்த பணியிலிருந்து விடுவிக்க ரூ. 35,000 லஞ்சம் கேட்டு உள்ளனர் என்பதும் தெரிய வந்தது. இதற்காக, முதலில் முன்பணமாக ரூ.10,000, பின்னர் ரூ.25,000 என இரண்டு கட்டமாக கூகுள் பே மூலம் பெற்றுள்ளதை போலீஸார் விசாரணையில் கண்டறிந்தனர்.

இதேபோல், எலச்சிபாளையம், வினை தீர்த்தபுரம், திருமலைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணியாற்றிய ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர்களிடமும் கூகுள் பே மற்றும் வங்கி கணக்கு மூலம் லஞ்சம் பெற்றுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. அதேசமயம், சிலரிடம் பணமாகவும் வாங்கி உள்ளனர். மேலும், துணை இயக்குநரின் வங்கி கணக்கிற்கு சட்ட விரோதமாக பண பரிமாற்றம் நடைபெற்றதும் போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, நாமக்கல் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் பிரபாகரன், சுகாதார ஆய்வாளர் முத்துமணி மற்றும் சக்திமுருகன் ஆகிய மூன்று பேர் மீதும், நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்து, துறை ரீதியான நடவடிக்கையும் இவர்கள்மீது பாயும் என்று சொல்லப்படும் நிலையில், இந்த விவகாரம் நாமக்கல் மாவட்ட அதிகாரிகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.