மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ருதா, பிரபல தனியார் வங்கி ஒன்றில் முக்கிய பதவியில் இருக்கிறார். சோஷியல் மீடியாவில் பிரபலமான அம்ருதாவிடம் பெண் ஒருவர் லஞ்சம் கொடுக்க முயன்றுள்ளார். இது தொடர்பாக அம்ருதா பட்னாவிஸ் மும்பை போலீஸில் கொடுத்துள்ள புகாரில், தனக்கு அனிக்ஷா என்ற பெண் ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாக தெரிவித்துள்ளார். கடந்த 20-ம் தேதி மும்பை மல்பார் ஹில் போலீஸில் கொடுத்துள்ள புகாரில், “அனிக்ஷா என்ற பெண் ஃபேஷன் டிசைனர் கடந்த 16 மாதங்களாக என்னுடன் தொடர்பில் இருந்தார். எனது வீட்டிற்கும் வந்தார். அவ்வாறு வரும் போது தன்னிடம் சில சூதாட்டக்காரர்கள் குறித்து பேசினார். அவர்கள் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தைகள் கூறினார்.

ஒரு கட்டத்தில் எனது தந்தையின் கிரிமினல் வழக்கு ஒன்றில் தலையிட்டு திரும்ப பெற ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றார்” என்று குறிப்பிட்டுள்ளார். அம்ருதா தனது புகாருடன் வீடியோ க்ளிப், வாய்ஸ் மெசேஜ், வாட்ஸ்ஆப் மெசேஜ்களை சாட்சியங்களாக சேர்த்து கொடுத்துள்ளார். அப்பெண் தனக்கு மறைமுகமாக மிரட்டல் விடுத்துள்ளார் என்றும் அம்ருதா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக போலீஸார் லஞ்ச ஒழிப்பு மற்றும் மிரட்டல் ஆகிய குற்றச்சாட்டின் கீழ் 120 வது சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அனிக்ஷா மும்பை அருகில் உள்ள உல்லாஸ் நகரில் வசித்து வருகிறார். அவரின் வீட்டிற்கு சென்ற போலீஸார் அவரை கைது செய்துள்ளனர். அனிக்ஷா பிரபல சூதாட்டாரர் அனில் ஜெய்சிங்கானியின் மகள் ஆவார். அனில் ஜெய்சிங்கானி மீது 14 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இது தொடர்பாக 3 முறை கைது செய்யப்பட்டுள்ளார். தனது உடல் நிலை, தனது மனைவியின் உடல் நிலையை காரணம் காட்டி ஜாமீனில் வெளியில் வந்து தலைமறைவாக இருக்கிறார்.

கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருக்கும் அனில் ஜெய்சிங்கானியை அமலாக்கப்பிரிவு, மும்பை, தானே, கோவா, அஸ்ஸாம், மத்திய பிரதேச போலீஸார் தேடி வருகின்றனர். சூதாட்டம் மட்டுமல்லாது மிரட்டி பணம் பறித்தலிலும் ஈடுபட்டுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு உல்லாஸ் நகரில் உள்ள அனில் வீட்டிற்கு மும்பை போலீஸார் சீல் வைத்துள்ளனர். அம்ருதா போலீஸில் புகார் கொடுத்திருப்பது குறித்து சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் பிரச்னையை கிளப்பினர். அனிக்ஷா தனது தந்தை மீதான வழக்குகளில் தலையிடவே அம்ருதாவை அணுகி இருப்பதாக கூறப்படுகிறது.