சிறு, குறு, நடுத்தர தொழில்களின் ஏற்றுமதியை அதிகரிக்க 8 தொழிற்பேட்டை, 10 ஏற்றுமதி மையங்கள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

சென்னை: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் ஏற்றுமதியை அதிகரிக்க தமிழகத்தில் புதிதாக 8 தொழிற்பேட்டை, 10 ஏற்றுமதி மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித் துள்ளார்.

இந்திய பொறியியல் ஏற்றுமதிமேம்பாட்டு கவுன்சில் (இஇபிசி)நடத்தும் 10-வது இந்திய சர்வதேசபொறியியல் கொள்முதல் கண்காட்சி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் (எம்எஸ்எம்இ) நிறுவனங்கள் சார்பில் 340 அரங்குகள் இடம்பெற்றுள்ளன.

நாளை (மார்ச் 18) வரை நடைபெறும் இக்கண்காட்சியை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்து, இந்தியாவில் சிறப்பாக செயல்பட்ட 10 சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு விருதுகளை வழங்கினார். மேலும் ஜி20 மாநாடு தொடர்பான 2 ஆய்வறிக்கைகளையும் வெளியிட்டார்.

தொடக்க விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யும் பொருட்களில் 45 சதவீதம் எம்எஸ்எம்இ நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள்தான். கடந்த ஆண்டு இந்தியா, 112 பில்லியன் டாலருக்கு பொறியியல் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதில் தமிழகத்தின் பங்களிப்பு 16 பில்லியன் டாலராகும்.

தமிழ்நாடு ஏற்றுமதி செயல்திட்டத்தின் கீழ் மாவட்டங்கள் மற்றும் கிராமப்புறங்களில் தயாரிக்கப்படும் பொருட்களை உலகமெங்கும் ஏற்றுமதி செய்யும் வகையில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் 10 இடங்களில் ஏற்றுமதி மையங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே ஏற்றுமதி குறித்தஆலோசனைகளை எம்எஸ்எம்இநிறுவனங்களுக்கு வழங்குவதற்காக கோவை, திருச்சி, ஓசூர் மற்றும்மதுரை ஆகிய 4 இடங்களில் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி தகவல் மையங்கள் அமைக்க ரூ.16 கோடியே 69 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒற்றை சாளர முறை 2.0 திட்டம்மூலம் இதுவரை 12,313 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 10,947 தொழில்முனைவோருக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி கடந்த 2 ஆண்டுகளில் எம்எஸ்எம்இ துறையில் 3 வகையான செயல்திட்டங்களின்கீழ் ரூ.687 கோடி மானியத்துடன் 2,756 வங்கிக்கடன் உதவிகள்வழங்கப்பட்டு, 19,335 இளைஞர்கள்புதியதொழில்முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் 2 ஆண்டுகளில் 8,350 நிறுவனங்களுக்கு ரூ.519 கோடிமானியமாகவும் வழங்கப்பட்டுள்ளது. எம்எஸ்எம்இ தொழில்துறை வளர்ச்சிக்காக ரூ.171.24 கோடி மதிப்பீட்டில் 254 ஏக்கர் பரப்பளவில் 5 புதிய தொழிற்பேட்டைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது மேலும் 8 புதிய தொழிற்பேட்டைகளை, 537.7 ஏக்கர் பரப்பளவில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில் எம்எஸ்எம்இ செயலர் வி.அருண் ராய், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணைசெயலர் எல்.சத்யா ஸ்ரீனிவாஸ், இந்திய பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர் அருண்குமார் கரோடியா, மூத்ததுணை தலைவர் பங்கஜ்சதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.