மணிஷ் சிசோடியா மீது சிபிஐ புதிய வழக்கு – முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கண்டனம்

புதுடெல்லி: டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மீது சிபிஐ புதிய வழக்கு பதிவு செய்துள்ளது. இதற்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெல்லி அரசின் மதுபான கொள்கை வழக்கில் முன்னாள் முதல்வர் மணிஷ் சிசோடியாவை சிபிஐ ஏற்கெனவே கைது செய்து சிறையில் அடைத்தது. தற்போது அவர் அமலாக்கத் துறையின் பாதுகாப்பில் விசாரணையை சந்தித்து வருகிறார். இந்நிலையில் மணிஷ் சிசோடியா மற்றும் 5 அதிகாரிகள் மீது சிபிஐ புதிய வழக்கு பதிவு செய்துள்ளது. அதில் டெல்லி அரசு புதிதாக ஏற்படுத்திய ரகசிய தகவல் பிரிவை (ஃபீட்பேக் யூனிட்), ஆம் ஆத்மியின் அரசியல் உளவு வேலைகளுக்கு பயன்படுத்தியதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

டெல்லி அரசின் ரகசிய தகவல் பிரிவு கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் உளவு பணி செலவுகளுக்காக ரூ.1 கோடி நிதி வழங்கப்படுகிறது. இதன் அதிகாரிகள் நியமனத்துக்கு துணை நிலை ஆளுநரிடம் ஒப்புதல் பெறவில்லை. இந்தப் பிரிவு தாக்கல் செய்த அறிக்கைகளில் 60% டெல்லி அரசுத் துறைகளின் ஊழல் விவகாரம். 40%, ஆம் ஆத்மி கட்சியின் நலன் சார்ந்த அரசியல் உளவு அறிக்கைகள்.

இந்தப் பிரிவு ஆம் ஆத்மி கட்சியின் நலனுக்கு முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் அறிக்கைகளின்படி டெல்லி அரசின் எந்த ஊழியர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்தப் பிரிவை உருவாக்கியதில் மணிஷ்சிசோடியா முக்கிய பங்காற்றியுள்ளார். விதிமுறைகளை மீறி செயல்பட்டதற்காக, அப்போதைய ஊழல்கண்காணிப்பு செயலாளர் சுகேஷ் குமார், இத்துறையின் இணை இயக்குநரும், முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் சிறப்பு ஆலோசகருமான ஒய்வுபெற்ற சிஐஎஸ்எப் டிஐஜி ராகேஷ் குமார் சின்கா, துணை இயக்குநர் பிரதீப் குமார் பூன்ஜ், உளவுப்பிரிவு அதிகாரியாக செயல்பட்ட ஓய்வுபெற்ற சிஐஎஸ்எப் கமாண்டன்ட் சதீஷ் கேத்ரபால், முதல்வரின் ஆலோசகர் கோபால் மோகன் ஆகியோர் மீது சிபிஐ பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறும்போது, ‘‘மணிஷ் சிசோடியா மீது பல வழக்குகள் போட்டு அவரை நீண்ட காலம் சிறையில் வைப்பதுதான் பிரதமரின் திட்டம். இது வருத்தமான விஷயம்’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.