மகாராஷ்டிராவில் விவசாயிகளுக்கு இந்த ஆண்டு வெங்காயத்திற்கு போதிய விலை கிடைக்கவில்லை. இதனால் கடுமையான இழப்பை சந்தித்துள்ள விவசாயிகள் விளை பொருட்களுக்கு போதிய விலை கிடைக்கவேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாசிக்கிலிருந்து மும்பை நோக்கி நடைப்பயணமாக வந்து கொண்டிருக்கின்றனர்.
அவர்கள் வரும் வழியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் ஆதிவாசி மக்கள் பேரணியில் இணைந்து கொண்டிருக்கின்றனர். தற்போது பேரணி மும்பை அருகில் இருக்கும் தானே மாவட்டத்திற்குள் நுழைந்துள்ளது. தானே மாவட்டம் முதல்வர் ஷிண்டேயின் சொந்த ஊராகும். எனவே பேரணியாக வரும் விவசாயிகளை சந்தித்து பேச தாதா புசே, அதுல் சாவே ஆகிய இரண்டு அமைச்சர்களை முதல்வர் அனுப்பி வைத்தார். இரண்டு அமைச்சர்களும் விவசாயிகளை சந்தித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது.

மீண்டும் அவர்கள் விவசாயிகள் கோரிக்கை குறித்து சந்தித்து பேச இருக்கின்றனர். இதில் உடன்பாடு எட்டப்படவில்லையெனில் மும்பையில் முதல்வர் மற்றும் துணை முதல்வரை விவசாயிகள் சந்தித்து பேசுவார்கள் என்று அமைச்சர் புசே தெரிவித்தார். வெங்காயத்திற்கு குவிண்டால் ஒன்றுக்கு 600 ரூபாய் மானியம் கொடுக்கவேண்டும், விவசாயத்திற்கு 12 மணி நேரம் மின்சாரம் கொடுக்கவேண்டும் என்பது விவசாயிகளின் பிரதான கோரிக்கையாகும்.
நேற்று விவசாயிகள் கசராவை தாண்டி கலம்ப் என்ற கிராமத்தில் தங்கினர். தற்போது பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் நடைப்பயணம் காலை மற்றும் மாலை நேரத்தில் மட்டும் தொடர்கிறது. அவர்கள் 20-ம் தேதி மும்பை வந்து சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் சட்டமன்றத்திற்கு எதிரில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.