திருவாரூர் அருகே தேசிய பாரம்பரிய நெல் மாநாடு 25 பல்கலை கழக மாணவர்கள் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிப்பு: அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு

திருவாரூர்: திருவாரூர் அருகே நடந்த தேசிய பாரம்பரிய நெல் மாநாட்டில் 25 பல்கலை கழக ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். தேசிய பாரம்பரிய நெல் மாநாட்டு கழகம் மற்றும் மத்திய பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய தேசிய பாரம்பரிய நெல் மாநாடு பல்கலைக்கழக துணை வேந்தர் கிருஷ்ணன் தலைமையில் திருவாரூர் அடுத்த நீலக்குடி யில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. இம் மாநாட்டில், பூண்டி கலைவாணன் எம்எல்ஏ, பிரான்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் ஜூலியன் ஜின் மலார்டு ஆடம், பாரம்பரிய நெல் விவசாயி தியாகபாரி முன்னிலை வகித்து பேசினர். இதில், சுற்றுச்சுழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ. மீ. மெய்யநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.

இந்த மாநாட்டில், பாரம்பரிய நெல் ரகங்களில் உள்ள சத்துக்கள் குறித்து அறிவியல் பூர்வமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தெரிந்து கொள்ளும் வகையில் நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த 25 பல்கலைக் கழகங்களை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் மாநாட்டில் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். மாநாட்டில், பாரம்பரிய அரிசிகளில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு பாரம்பரிய அரிசியை ஏற்றுமதி செய்யும் வகையில் அதற்கான பாரம்பரிய நெல் ரகங்களின் முக்கியத்துவம் குறித்தும் மாநாட்டில் எடுத்துரைக்கப்பட்டது. அங்கக வேளாண் கொள்கை 2023 ஐ வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாநாட்டின் விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, பல்கலைக்கழக பேராசிரியர் வேல்முருகன் வரவேற்றார். தேசிய பாரம்பரிய நெல் மாநாட்டு கழக ஒருங்கிணைப்பாளர் வரதராஜன் நன்றி கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.