காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடிவிபத்து எப்படி நடந்தது? சிக்கிய உரிமையாளர் நரேந்திரன்!

பட்டாசு ஆலை வெடிவிபத்துகள் சமீப காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆண்டிற்கு ஒன்றிரண்டு என்றிருந்த நிலை மாறி, மாதத்திற்கு ஒன்றிரண்டு என்ற நிலை வந்துள்ளது. அந்த பட்டியலில் காஞ்சிபுரத்தில் நடந்த வெடிவிபத்தும் சேர்ந்திருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை அடுத்த குருவிமலை வளத்தோட்டம் பகுதியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நரேந்திரன் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.

விபத்து எப்படி நடந்தது?

இங்குள்ள குடோனிற்கு வெளியே பட்டாசு மூலப் பொருட்கள் காய வைக்கப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. இது தீப்பிடித்து எரிந்து பயங்கர விபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை சூரிய வெப்பத்தின் அதிகப்படியான தாக்கத்தால் தீப்பொறி ஏற்பட்டு வெடித்து சிதறியிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இருப்பினும் போலீசார் உரிய விசாரணை மேற்கொண்ட பின்னரே தகவல்கள் தெரியவரும்.

உயிரிழப்புகள் அதிகரிப்பு

இந்த விபத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயங்கள் உடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் வளத்தோட்டம் நரேந்திரன் ஃபயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலை உரிமையாளர் நரேந்திரன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

விபத்தில் காயமடைந்து காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர்களை மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி, காஞ்சிபுரம் சரக டிஐஜி பகலவன், காஞ்சிபுரம் எஸ்.பி டாக்டர் எம்.சுதாகர், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி ஆகியோர் நேரில் சந்தித்தனர். விரைவில் குணமடைய அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தனர்.

ஆட்சியர் ஆர்த்தி பேட்டி

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெடி விபத்தில் 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கம் மற்றும் செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனையில் 5 பேர் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 13 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

லைசென்ஸ் பெற்ற குடோன்

போலீசார் உரிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெடிவிபத்து நடந்த குடோனிற்கு 2024ஆம் ஆண்டு வரை அனுமதி வாங்கியுள்ளனர். அதில் எந்த பிரச்சினையும் இல்லை. குடோனில் உரிய பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா என போலீசார் விசாரணையில் தான் தெரியவரும் எனக் கூறினார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதற்கு முன்பு நடந்த பட்டாசு வெடி விபத்துக்கள்:

2006ல் வையாவூரில் கடந்த நடந்த வெடி விபத்தில் 3 பேர் பலி.2014ல் வையாவூரில் நடந்த வெடி விபத்தில் 6 பேர் பலி; பலர் காயம்.2017ல் ஆட்சியர் அலுவலகம் அருகே பள்ளத்தெருவில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசு வெடித்து இருவர் படுகாயம்.2018ல் காஞ்சிபுரம் நாகலுத்து தெருவில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பலி.2023ல் குருவிமலை பகுதியில் இன்று (மார்ச் 22) நடைபெற்ற வெடிவிபத்து.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.