"மனசாட்சியை உறங்க வைத்து விட்டு ஆட்சி நடத்த முடியாது" – ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தாக்கல் செய்து முதல்வர் ஸ்டாலின் பேச்சு 

சென்னை: மனசாட்சியை உறங்க வைத்து விட்டு எங்களால் ஆட்சி நடத்த முடியாது என்று ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தாக்கல் செய்து முதல்வர் பேசினார்.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடைசெய்து, கடந்த அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. பின்னர் அமைந்த திமுக அரசு கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்துதல் அவசர சட்ட மசோதாவுக்கு கடந்த ஆண்டு அக்.1-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.

இதையடுத்து, அக். 19-ம் தேதி சட்டப்பேரவையில், ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இது தொடர்பாக ஆளுநர் கேட்ட விளக்கங்களுக்கு தமிழக அரசு பதில் அளித்தது. சில மாதங்களாக மசோதாவை கிடப்பில் போட்டு வைத்திருந்த நிலையில், கடந்த 8-ம் தேதி மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார். இந்த மசோதாவை நிறைவேற்ற தமிழக சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பாக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறும்போது, ‘‘ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் சட்டத்தை நிறைவேற்ற, தமிழக சட்டப்பேரவைக்கு அதிகாரம் உள்ளது. வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மீண்டும் மசோதாவை நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்புவோம். இரண்டாவது முறையாக அனுப்பும்போது, அதை ஆளுநர் நிராகரிக்க வாய்ப்பில்லை’’ என்று தெரிவித்தார்.

இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா இன்று (மார்ச் 22) சட்டப்பேரவையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை தாக்கல் செய்து பேரவையில் பேசினார்.

அதில், “ஆன்லைன் ரம்மிக்கு எதிராக பொதுமக்களிடம் இருந்து 10,735 மின்னஞ்சல்கள் மூலம் கருத்துகள் பெறப்பட்டன. சட்ட ஒழுங்கைப் பேணுவதும், மக்களை பாதுகாப்பதும், மாநில அரசின் மிக முக்கியமான கடமை. மனசாட்சியை உறங்க வைத்து விட்டு எங்களால் ஆட்சி நடத்த முடியாது.

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதா, அறிவால் மட்டுமல்ல இதயத்தாலும் உருவாக்கப்பட்டது. மனித உயிர்களை பழிவாங்கும் ஆன்லைன் சூதாட்டங்களை ஒடுக்குவதில், இதயம் உள்ளவர்கள் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்காது, இருக்கவும் கூடாது.

மாநிலத்தில் உள்ள மக்களை காக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு, மீண்டும் சொல்கிறேன். மாநில அரசுக்கு உரிமை உண்டு.ஆன்லைன் சூதாட்ட அநியாயம் தொடராமல் இருக்க, இந்த சட்ட முன்வடிவை அனைத்து உறுப்பினர்களும் ஆதரிக்க வேண்டும். இனி ஒரு உயிர் பறிக்கப்படக் கூடாது, அநியாயம் தொடரக்கூடாது. அனைத்து உறுப்பினர்களும் இந்த சட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும்.” இவ்வாறு முதல்வர் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.