திருவள்ளூர் மாவட்டத்தில் தென்னை மரம் முறிந்து விழுந்து கட்டிடம் மேஸ்திரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள திருமல ராஜூப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி குப்பைய்யா (70). இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று பள்ளிப்பட்டு பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்பொழுது குப்பைய்யா அப்பகுதியில் உள்ள கோவிலில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
அப்பொழுது கோவிலின் பின்புறம் உள்ள தென்னை மரம் பலத்த காற்றினால் முறிந்து குப்பைய்யா மீது விழுந்துள்ளது. இதில் குப்பைய்யா பலத்த காயமடைந்த நிலையில் அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் குப்பைய்யா மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பள்ளிப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.