உடுமலை: உடுமலை அரசு மருத்துவமனை வளாகத்தில் குடிநீர் தொட்டி திறந்த நிலையில் இருப்பதாலும், அருகிலேயே குப்பை கொட்டப்படுவதாலும் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
உடுமலை அரசு மருத்துவமனையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். ஐநூறுக்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தரை தளத்தை ஒட்டிய குடிநீர் தொட்டியில் சேகரமாகும் குடிநீர், மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு ஏற்றப்பட்டு பின் குழாய்கள் மூலம் அனைத்து வார்டுகளிலும் விநியோகம் செய்யப்படுகிறது. தரையில் உள்ள குடிநீர் தொட்டிதிறந்த நிலையில் இருப்பதாலும், அருகிலேயே குப்பை கொட்டப்படுவதாலும் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கூறும்போது, ‘‘உடுமலை அரசு மருத்துவமனை வளாகத்தில் திறந்த நிலையில் உள்ள குடிநீர் தொட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன் எலிகள் செத்துக்கிடந்தன. குடிநீர் தொட்டி அருகிலேயே குப்பை, மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. குப்பையும் குடிநீர் தொட்டியில் விழும் அபாயம் உள்ளது. கழிவுப் பொருள் கலந்த குடிநீரை பருகும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து தொடர்புடைய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
இதுகுறித்து மருத்துவ அலுவலர் உமாமகேஸ்வரி கூறும்போது, ‘‘மருத்துவமனையில் தினமும் சேகரமாகும் குப்பையை நகராட்சிதான் அப்புறப்படுத்த வேண்டும். அவர்கள், உடனுக்குடன் குப்பையை அகற்றாததால், மருத்துவமனை வளாகத்தில் குப்பை தேங்கி விடுகிறது. இதுகுறித்து ஆட்சியர் ஆய்வின்போது எடுத்துரைத்ததால், கோட்டாட்சியர் மூலம் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.
108 ஆம்புலன்ஸ் வாகனங்களை இயக்குவோர் குடிநீர் தொட்டியின் மூடியை திறந்து குடிநீரை பயன்படுத்திவிட்டு பின் திறந்தநிலையிலேயே விட்டுச்செல்கின்றனர். இதுகுறித்து பலமுறை அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திறந்து கிடந்த தொட்டியில் எலி விழுந்தது தெரிந்ததும், உடனடியாக குளோரின் பவுடர் கொண்டு சுத்தம் செய்யப்பட்டுவிட்டது’’ என்றார்.