திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி பகுதியில் வசிக்கும் சார்லஸ் சுந்தர்ராஜ் என்பவரின் மனைவி லல்லி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் தினமும் சென்னை காசிமேடு பகுதிக்குச் சென்று, மீன் வாங்கி வந்து திருத்தணி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மீன் வியாபாரம் செய்துவந்திருக்கின்றனர்.
இந்த நிலையில், வழக்கம்போல் திருத்தணி பகுதியிலிருந்து புறநகர் ரயில் மூலமாக சென்னை காசிமேடு பகுதிக்கு மீன் வாங்குவதற்காக லல்லி சென்றிருக்கிறார். அப்போது திருவள்ளூரை அடுத்த ஏகாட்டூர் அருகே திடீரென இரண்டு இளைஞர்கள் லல்லியின் கழுத்திலிருந்த தாலியை அறுக்க முயன்றனர். சுதாரித்துக்கொண்ட லல்லி இளைஞர்களைத் தடுக்க, ஆத்திரமடைந்த இளைஞர்கள் லல்லியின் முகம், கையில் பிளேடால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியிருக்கின்றனர்.

இதனால் கை, முகத்தில் பலத்த காயமடைந்த லல்லி உடனடியாக திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள் நோயாளியாகச் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்கு பதிந்து, கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களைத் தேடிவருகின்றனர். சில நாள்களுக்கு முன்பு பேசின் பிரிட்ஜ் பாலத்துக்கு அருகே பீர் அடிப்பதற்காக செல்போன் திருடிய இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது