சென்னை: தமிழ்நாடு மின்வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படாமல் உள்ளதை கண்டித்து வரும் 28-ம்தேதி சென்னையில் பேரணி நடத்தப் போவதாக மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு அறிவித்தது.
இதையடுத்து, சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அதிகாரிகளுடன், தொழிற்சங்க பிரதிநிதிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், ஊழியர்களுக்கு 6 சதவீதம் ஊதிய உயர்வும், 25 வருடங்களுக்கு மேல் பணியாற்றிய ஊழியர்களுக்கு கூடுதலாகவும் ஊதியம் வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதை எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும் எனஊழியர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதை ஏற்க அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
எனவே, இதுதொடர்பாக அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காணவில்லை எனில், போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என ஊழியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.