ஆவியூர் ஜல்லிக்கட்டு | சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கி பரிசுகளை வென்ற மாடுபிடி வீரர்கள்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஆவியூரில் ஞாயிறன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு சீறிப்பாய்ந்தன. காளைகளை அடக்கிய வீரர்களுக்கு வெள்ளிக்காசு, கட்டில்,பீரோ உள்பட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.

ஆவியூரில் ஸ்ரீ கருப்பண்ணசாமி கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஞாயிறன்று (மார்ச் 26) ஜல்லிகட்டு நடைபெற்றது. ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட 700 காளைகள் திருச்சி, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் என பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பங்கேற்றன. 400க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் சுழற்சி முறையில் களமிறங்கினர்.

போட்டி தொடங்கும் முன் காளைகளுக்கு கால்நடை பராமரிப்புத் துறையினரால் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதேபோன்று, மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவக் குழுவினர் மருத்துவப் பரிசோதனை செய்தனர். போட்டிகளை அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் கல்யாண்குமார் தொடங்கிவைத்தார். முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது.

அதைத்தொடர்ந்து வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்ட காளைகள் களத்தில் சீறிப்பாய்ந்தன. சில காளைகள் வீரர்களின் பிடிக்கு சிக்காமல் தப்பி பாய்ந்தன. இக்காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பீரோ, கட்டில், அண்டா, சைக்கிள், கட்டில், மிக்ஸி, குக்கர், வெள்ளிக் காசுகள் உள்பட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.

காயமடைந்த வீரர்களுக்கு மருத்துவக் குழுவினரால் முதலுதவி சிகிச்சை அளிக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண ஆவியூர் மட்டுமின்றி காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர்.

அருப்புக்கோட்டை உதவி எஸ்.பி. கருண்காரட் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி. ஸ்ரீனிவாசபெருமாள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.