எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோரது மிரட்டலான நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகிய பேண்டஸி ஆக்ஷன் அட்வென்ச்சர் திரைப்படமான ‘ஆர்ஆர்ஆர்’ தற்போது உலகம் முழுவதும் கொண்டாடப்படும் படமாக மாறியுள்ளது. சர்வதேச விருதுகள் விழா விளங்கும் நிகழ்ச்சியில் ஆர்ஆர்ஆர் படம் அரங்கேற்றப்பட்டு படத்திற்கு பெரியளவில் பாராட்டு கிடைத்தது. இப்படத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் சேர்ந்து நடனமாடும் ‘நாட்டு நாட்டு‘ பாடலுக்கு ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. ஆஸ்கர் விருதாக வழங்கப்படும் அந்த தங்க பெண் சிலையை பாடலின் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் கைகளில் ஏந்தினர்.
ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு விருது கிடைத்ததற்கு உலகம் முழுவதும் இருந்து பல்வேறு பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். பாடலுக்கு விருது கிடைத்ததற்கு ஒருபுறம் பாராட்டுக்கள் குவிந்து வந்தாலும், மறுபுறம் எதிர்மறையான கருத்துக்களும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்தது. ஆஸ்கார் விருதை பெற எஸ்.எஸ்.ராஜமௌலி மற்றும் அவரது குழுவினர் ரூ.80 கோடி செலவு செய்திருப்பதாகவும், ஜேம்ஸ் கேமரூன் போன்ற திரையுலக பிரபலங்கள் இப்படத்தை பற்றி பெருமையாக பேச அவர்களுக்கு படக்குழு குறிப்பிட்ட தொகையை லஞ்சமாக வழங்கியிருப்பதாகவும் சில வதந்திகள் பரவ தொடங்கியது. இந்நிலையில் படத்தின் நிர்வாக தயாரிப்பாளரும், எஸ்.எஸ்.ராஜமௌலியின் மகனுமான எஸ்.எஸ்.கார்த்திகேயா ‘ஆர்ஆர்ஆர்’ படம் பற்றி எழுந்த வதந்திகளுக்கு பதிலளித்துள்ளார்.
கார்த்திகேயா இதுகுறித்து பேசுகையில், காசு கொடுத்தால் ஆஸ்கார் விருதினை வாங்கிவிடலாம் என்று கூறுவது பெரிய நகைச்சுவை. இந்த ஆஸ்கார் நிறுவனம் 95 ஆண்டு கால வரலாற்றை கொண்டது, இங்கு அனைத்தும் ஒரு செயல்முறையின்படி தான் நடக்கிறது. ஒன்றை மட்டும் சொல்கிறேன், பணத்தை கொடுத்து ரசிகர்களின் அன்பை வாங்கமுடியாது மற்றும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் மற்றும் ஜேம்ஸ் கேமரூன் ஆகியோரின் வார்த்தைகளையும் நம்மால் வாங்க முடியாது. ரசிகர்களே எங்களுக்கு நிறைய விளம்பரம் செய்துள்ளனர். ஆஸ்கார் விருதுக்கு விளம்பரம் செய்வதற்காக ரூ.5 கோடி செலவாகும் என நினைத்து பின்னர் ரூ.2 முதல் ரூ.3 கோடி வரை செலவு செய்ய திட்டமிட்டோம். ஆனால் படம் நாமினேஷனுக்கு தேர்வானதால் ரூ.8.5 கோடி வரை செலவு செய்தோம் என்று கூறினார்.