புதுச்சேரியில் மீனவர்களுக்கு நிவாரண நிதி, உதவித் தொகை உயர்வு: அரசின் முக்கிய அறிவிப்புகள்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எம்எல்ஏக்கள் பேசி முடித்த பின்னர் அமைச்சர் லட்சுமி நாராயணன் பதிலளித்து பேசியபோது, “70 வயதிலிருந்து 79 வயதுடைய மீனவ முதியோர்களின் உதவித் தொகை ரூ.3,000 இருந்து ரூ.3,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்” என்று அறிவித்தார். அவர் வெளியிட்ட இதர அறிவிப்புகள்:

“புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சுனாமி குடியிருப்பு பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த தொகுதிக்கு ஒரு கிராமம் என கண்டறி்து 13 மீனவ கிராமங்களில், கிராமம் ஒன்றுக்கு ரூ.1 கோடி வீதம் ரூ.13 கோடி நடப்பாண்டில் நபார்டு வங்கி மூலம் கடன் உதவி பெறப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.

பதிவு செய்யப்பட்ட மீன்பிடி கலன்களுக்கு வழங்கப்படும் டீசல் வரி விலக்கோடு சேர்த்து லிட்டர் ஒன்றுக்கு ரூ.12 மானியமாக படகு உரிமையாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இத்திட்டம் ஏப்ரல் மாதத்தில் இருந்து அமலுக்கு வரும்.

புதுச்சேரி கடற்கரை பகுதியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் சுனாமி நினைவிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மீன்பிடி தடைக்காலத்தில் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் தடைக்கால நிவாரணம் ரூ.5,500-ல் இருந்து ரூ.6,500 ஆகவும், மழைக் காலத்தில் வழங்கப்படும் மழைக்கால நிவாரணம் ரூ.2,500-ல் இருந்து ரூ.3,500 ஆகவும் உயர்த்தி வழங்க அரசாணை கடந்த 23ம் தேதி பெறப்பட்டுள்ளது. இதற்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு ரூ.2.85 கோடி நடப்பு நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டு 19 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு வரும் ஏப்ரல் முதல் வழங்கப்படும்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கும் போது இறக்க நேரிட்டால் உடனடியாக இறப்பு நிவாரணத்தை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாகவும், காணாமல் போகும் மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிவாரண தொகையினை ரூ.1.50 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாகவும் உயர்த்தி வழங்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அரசாணை விரைவில் வெளியிடப்படவுள்ளது.

மீனவர்கள் இறந்த பின் அவர்களின் ஈமச் சடங்கிற்கான உதவித் தொகை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தி வழங்க நடப்பு நிதியாண்டில் ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்படும்.

வழக்கறிஞர்கள் சேமநல நிதிக்காக நடப்பு நிதியாண்டிலும் ரூ.20 லட்சம் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆயினும் இத்தொகையினை ரூ.2 கோடியாக உயர்த்தி தரக்கோரி நிதித்துறை பட்ஜெட்பிரிவிடம் கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதன்படி பட்ஜெட் பிரிவும் கூடுதலாக ரூ.80 லட்ம் வரை உயர்த்தி தர உறுதி அளித்துள்ளது.

வழக்கறிஞர் சேமநல நிதித்து ரூ.1 கோடி வழங்குவது தொடர்பான ஆணை வழங்கல் நிதித்துறை, பட்ஜெட் பிரிவின் பரிசீலனையில் உள்ளது. இது 2023-24-ம் ஆண்டில் வழங்கப்படும். புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ரூ.91.41 லட்சம் செலவில் சூரிய ஒளி தகடுகள் பொருத்தும் பணி புதுச்சேரி புதுப்பிக்க வல்ல எரிசக்தி முகமை வாயிலாக மேற்கொள்ளப்பட இருக்கிறது.

புதுச்சேரி நீதி துறையில் 19 சிவில் நீதிபதிகள் மற்றும் 1 மாவட்ட நீதிபதி நேரடி நியமனம், சென்னை உயர் நீதிமன்றம் வாயிலாக 3 நிலைகளில் நடைபெற உள்ளது. இது தொடர்பான பணிகளுக்காக ரூ.55 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு விரைவில் செலுத்தப்பட உள்ளது.

புதுச்சேரியை சேர்ந்த வழக்கறிஞர்களுக்கு வயது உச்சவரம்பை உயர்த்தி விரைவில் அரசாணை வெளியிடப்படும்.

அனைத்து துறைகளின் கோப்புகளும் மின் அலுவலகம் திட்டத்தின் கீழ் ஏப்ரலில் கொண்டுவரப்பட்டு 6 மாதத்தில் முடிக்கப்படும்” என அமைச்சர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.