வரும் ஏப்ரல் 8-ம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி..!!

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ரூ.2,467 கோடி மதிப்பில் 2.36 லட்சம் சதுர மீட்டரில் அதிநவீன ஒருங்கிணைந்த விமான முனையம் உருவாகி வருகிறது. இதன் முதல் கட்ட பணிகள் நிறைவடைந்து உள்ளன. இந்த புதிய முனையத்தின் கீழ் தளத்தில் பயணிகளின் உடமைகளை கையாள விசாலமான வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. தரை தளத்தில் சர்வதேச பயணிகள் வருகை பகுதியாகவும், பயணிகளுக்கான வழக்கமான நடைமுறைகளும் கையாளப்படும்.

2-வது தளத்தில் பயணிகளுக்கான புறப்பாடு நடைமுறைகளை மேற்கொள்ளும் வகையில் இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. மற்ற தளங்களில் விமான நிறுவன அலுவலகங்கள், பயணிகள் ஓய்வு அறைகள் மற்றும் நிர்வாக சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 5 தளங்களுடன் இந்த புதிய முனையத்தின் முதற்கட்ட கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து விட்டதால் அங்கு நவீன கருவிகள், உபகரணங்கள் பொறுத்தப்பட்டு அதன் செயல்பாடுகளை சோதித்து வருகின்றனர்.

கீழ் தளத்தில் பயணிகளின் உடமைகள் கையாளப்படும் பணிகள் கடந்த 10-ந் தேதியில் இருந்து சோதனை முறையில் செயல்பாட்டுக்கு வந்து விட்டது. அதே போல் புதிய முனையத்தில் அமைக்கப்பட்ட மல்டிலெவல் கார் பார்க்கிங், ஷாப்பிங் மால், திரையரங்குகள் போன்றவைகளும் கடந்த பிப்ரவரி மாதம் 4-ந் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் இந்த புதிய ஒருங்கிணைந்த விமான முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி முழுமையாக திறந்து வைக்க உள்ளார். இதற்காக அவர் வருகிற 8-ம் தேதி சென்னை வருகிறார். மீனம்பாக்கம் ஏ.எம். ஜெயின் கல்லூரி மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் விமான நிலைய ஒருங்கிணைந்த முனையத்தை திறந்து வைக்கும் பிரதமர் நரேந்திர மோடி அதே நிகழ்ச்சியில் சென்னை-கோவை இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையையும் தொடங்கி வைக்கிறார்.

இதற்காக ஜெயின் கல்லூரியில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது. பிரதமர் திறந்து வைக்க இருக்கும் புதிய விமான முனையத்தில் ஆண்டுக்கு சுமார் 2.7 கோடி பயணிகளை கையாள முடியும் அளவுக்கு வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. இந்த முனையம் முழுவதும் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டு உள்ளதால் அனைத்து இடங்களும் வண்ண விளக்குகளால் ஜொலிக்கின்றன. மேலும் இந்த கட்டிடத்தில் தமிழ்நாட்டின் கலாசாரம் மற்றும் பெருமைகளை பிரதிபலிக்கும் வண்ணமாக வண்ணமயமான கோலங்கள், படங்கள், ஓவியங்கள் தனித்துவத்தில் வரையப்பட்டு உள்ளன.

80 சோதனை கவுண்டர்கள், 8 சுய சோதனை கவுண்டர்கள், 6 லக்கேஜ் கவுண்டர்கள் மற்றும் 108 குடியுரிமை அதிகாரிகள் சோதனை கவுண்டர்களும் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் பயணிகள் சோதனைகளை முடித்துக்கொண்டு எளிதில் செல்ல முடியும். சென்னையில் ஏப்ரல் 8-ந்தேதி இரு திட்டங்களையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி அன்று இரவு கிண்டி கவர்னர் மாளிகையில் தங்குவார் என தெரிகிறது. அப்போது கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக பா.ஜனதா நிர்வாகிகள் சந்தித்து பேச முடிவு செய்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பிரதமர் சென்னை வருவதையொட்டி விமான நிலையம், விழா மைதானம் என பிரதமர் செல்லும் வழி நெடுகிலும் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க பா.ஜனதா கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.