சென்னை: Pathu Thala – பத்து தல படத்தை பார்க்க டிக்கெட் இருந்தும் நரிக்குறவர் இன மக்களை உள்ளே விடாத ரோகிணி திரையரங்கத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
மாநாடு படம் மூலம் கம்பேக் கொடுத்த சிம்பு அடுத்ததாக கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்தார். மாநாடு படம் போலவே வெந்து தணிந்தது காடும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதனால் சிலம்பரசன் படு உற்சாகத்துடன் காணப்பட்டார்.
பத்து தல ராவணன் சிம்பு
அதே உற்சாகத்துடன் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடிக்க கமிட்டானார் சிம்பு. மஃப்டி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், கௌதம் மேனன், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இந்தப் படமும் வெற்றியடைந்து சிம்பு ஹாட்ரிக் வெற்றியை ருசிப்பார் என அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இன்று ரிலீஸான பத்து தல
பத்து தல படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. துணிவு, வாரிசு படங்களுக்கு நடந்ததுபோலவே அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்ட முதல் காட்சி காலை 8 மணிக்கு திரையிடப்பட்டது. இருந்தாலும் முதல் காட்சியை பார்த்துவிட சிம்பு ரசிகர்கள் திரையரங்குகளுக்கு படையெடுத்துள்ளனர். முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் படத்தை ஏகத்துக்கும் கொண்டாடி வருகின்றனர். ஏஜிஆர் ராவணன் கதாபாத்திரத்தில் சிம்பு அட்டகாசம் செய்திருப்பதாகவும் தெரிவித்து வருகின்றனர்.

பத்து தல படம் பார்க்க வந்த நரிக்குறவர்கள்
சென்னையில் இருக்கும் பிரபலமான திரையரங்குகளில் ரோகிணி திரையரங்கமும் ஒன்று. எந்த பெரிய ஹீரோவின் படம் வந்தாலும் ரோகிணியில் திரையிடப்படும். அந்தவகையில் பத்து தல படமும் ரோகிணி திரையரங்கில் திரையிடப்படுகிறது. பத்து தல படத்தின் காலை 8 மணி காட்சிக்கு நரிக்குறவர் இனத்தை சேர்ந்த இரண்டு பெண்களும் ஒரு சிறுவனும் வந்திருந்தனர்.

நரிக்குறவர்களை உள்ளே விடாத ரோகிணி திரையரங்கம்
படத்திற்கான டிக்கெட்டையும் வாங்கிய அவர்கள் திரையரங்கத்துக்குள் செல்ல முயன்றனர். அப்போது தியேட்டர் நுழைவு வாயிலில் நின்றுகொண்டிருந்த ஊழியர் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார். இதனையடுத்து அங்கு இருந்த ஒருவர், “கையில்தான் டிக்கெட் இருக்கிறதே பிறகு ஏன் உள்ளே விட மறுக்கிறீர்கள்” என ஊழியரிடம் கேள்வி எழுப்பியும்; அவர்களை உள்ளே விட ஊழியர் மறுத்துவிட்டார்.

திரையரங்கத்திலும் சாதிய பாகுபாடா?
திரையரங்கத்துக்குள் சென்றுவிட்டால் உயர்ந்த சாதி, தாழ்த்தப்பட்ட சாதி என்ற எந்த பிரிவினையும் பாகுபாடும் இருக்காது. அதனால்தான் திரையரங்கம் பெரும்பாலானோரால் கொண்டாடப்படுகிறது. ஆனால் ரோகிணி திரையரங்கத்தில் நடந்த இந்த அவலத்தை பார்க்கும்போது திரையரங்கத்தினுள்ளும் சாதிய பாகுபாடு வந்துவிட்டதா என்ற அச்சம் பலரிடம் எழுந்திருக்கிறது. அதுமட்டுமின்ற் நரிக்குறவர் இன மக்களைப் பற்றியும், அவர்கள் சந்திக்கும் வலிகள் குறித்து ஜெய் பீம் என்ற படமே வந்த பிறகும்கூட அவர்கள் இவ்வாறு ஒதுக்கப்படுவது ஆரோக்கியமான போக்கு இல்லை என கூறி பலரும் ரோகிணி திரையரங்குக்கு கண்டனத்தை தெரிவித்துவருகின்றனர்.

மேல்தட்டு மக்களுக்கு மட்டும்தான் மல்டி ப்ளக்ஸ் திரையரங்குகளா?
அதேபோல் சமீபத்தில் மற்றொரு பிரபலமான திரையரங்கில் லுங்கி அணிந்து வந்ததால் ஒருவருக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்ட வீடியோ வெளியாகி ட்ரெண்டானது. ஒருவர் உடையை வைத்தும், தோற்றத்தை வைத்தும் திரையரங்குக்குள் அனுமதி மறுக்கப்படும் சம்பவங்களை பார்க்கையில் மேல்தட்டு மக்களுக்கு மட்டும்தான் மல்டி ப்ளக்ஸ் திரையரங்குகளா என்ற கேள்வி எழுகிறது. இந்த அராஜக போக்கை திரையரங்குகள் உடனடியாக திருத்திக்கொள்ள வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

ரோகிணி தியேட்டரின் விளக்கம்
இந்த விவகாரம் பூதாகரமான பிறகு ரோகிணி திரையரங்கத்தின் உரிமையாளர் நிகிலேஷ் அளித்திருக்கும் விளக்கத்தில், “இவ்விவகாரம் நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்ததும் அவர்கள் படம் தொடங்குவதற்கு முன்பே சரியான நேரத்திற்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்” என குறிப்பிடப்பட்டிருக்கிறது.