சட்டசபை: `பெரிய துளை இருக்கும்போது சின்ன துளை எதற்கு?!’ – அண்ணா சொன்ன கதையை நினைவூட்டிய பொன்முடி

சட்டப்பேரவையில் இன்று உயர் கல்வித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடந்தது. இதில் உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் பொன்முடி ‘அண்ணா சொல்லும் குட்டிக்கதையைப் பேசி’ அரங்கத்தில் உள்ளவர்களைச் சிரிக்க வைத்தார்.

அமைச்சர் பொன்முடி ’அயலக மொழி’ குறித்து பேசியபோது, “அண்ணா இருமொழி கொள்கையைத் தீவிரமாகப் பேசினார். அவர் ’ஆங்கிலம், தமிழ் இருந்தால் போதும்’ என்றார். புதிய கல்விக் கொள்கையை ஆதரிக்கறவர்கள் இங்கு இருக்கிறார்கள். ’ஏன் அண்ணா மும்மொழி கொள்கையை எதிர்த்தார் என்பதை அவங்களும் தெரிஞ்சுக்கட்டும்’ எனக் கூறி விளக்கினார்…” ‘அண்ணா இருமொழி இருந்தால் போதும்’ என்றார். ஒன்று உலக மொழி ’ஆங்கிலம்’ (International Language), மற்றொன்று ‘உள்ளூர் மொழி-தமிழ்’ (Regional Language). அதற்கு தான் அண்ணா ஒரு கதையைச் சொன்னார். ஒருத்தர் வீட்டில் பெரிய ஓட்டை ஒன்றை துளையிட்டிருந்தார். ’பக்கத்து வீட்டார் எதற்கு இந்த துளை’ எனக் கேட்டார். அவர் சொன்னார் ‘பூனை போக வேண்டும்” என்பதற்காக என்றானாம்.  அடுத்த நாள் பக்கத்து வீட்டுக்காரர் வந்து பார்க்கும்போது பெரிய ஓட்டைக்கு அருகிலேயே சிறிய ஓட்டை துளையிடப்பட்டிருந்தது. அது எதற்காக என வினவினார். அப்போது அவர் சொன்னார் ‘பெரிய துளை பெரிய பூனைக்கு, சின்ன துளை பூனைக் குட்டிக்கு‘ என்றானாம். ஏன்…பெரிய பூனை செல்லும் பெரிய துளை வழியாக பூனைக்குட்டியால் செல்ல முடியாதா… இது அண்ணா சொன்ன உதாரணம். ஆகவே, ’உலக மொழி ஆங்கிலம்  இருக்கும் போது , மத்த இந்தி மொழி தேவையில்ல’ என்றார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை

மேலும் தொடர்ந்தவர், “அதேபோல், தற்போது தயிர் பாக்கெட்டிலும் கூட ‘தஹி’ என அச்சிட சொல்லி இந்தியைத் திணிக்கிறார்கள். இன்னும் கொஞ்ச நாட்களில் ’கானா ஹாயா’ என ’சாப்டியா’ என்பதை இந்தியில் எழுதுங்கள்…என்பார்கள். அப்படி எதுவும் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக தான் முதலமைச்சர் குரல் கொடுத்து அது தடுக்கப்பட்டுள்ளது. இங்கேயே, இவர்களை இந்தி மொழியை இவ்வளவு திணிக்கிறார்கள் என்றால், மற்ற மாநிலங்களை எண்ணிப் பாருங்கள். மத்திய அரசு புதிய மொழி கொள்கையால் இந்தியைத் திணிக்க மட்டுமே எண்ணுகிறது. அதனால் தான் நாம் மத்திய அரசு புகுத்தும் மும்மொழி கொள்கையை விடுத்து இருமொழி கொள்கையைக் கையிலெடுத்துள்ளோம்.

அந்தவகையில் இருமொழி கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்பதால் தான், மாநிலத்துக்கான புதிய கல்விக் கொள்கையை உருவாக்க குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், மற்ற மொழியைக் கற்பிப்பதில் தமிழகத்துக்கு எந்தப் பிரச்னையும் இல்லை” என விளக்கினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.