"நாயா கூட மதிக்க மாட்றாங்க".. "ரோகிணி" மட்டும்தான் குற்றவாளியா.. உண்மையை உடைக்கும் நரிக்குறவர்கள்

சென்னை: ரோகிணி திரையரங்களில் நரிக்குறவர் இன மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து கண்டனங்கள் குவிந்து வரும் வேளையில், அவர்கள் அன்றாடம் சந்தித்து வரும் அவலங்கள் நம்மை இன்னும் திகைப்பிலும், சோகத்திலும் ஆழ்த்துவதாக உள்ளன.

“ஜாதி” என்ற ஒற்றை காரணத்தால் அவர்கள் பொது இடங்களில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் கொஞ்சம் நஞ்சம் அல்ல. இன்றைய நாகரீக சமூகத்தில் கூட ஒரு இனம் இந்த அளவுக்கு ஜாதி இழிவுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதை என்னவென்று சொல்வது..?

நரிக்குறவர் சமூகத்தினரை அவமதித்துவிட்டதாக கூறி இன்றைக்கு ரோகிணி திரையரங்கம் மீது பாயும் நமது சமூகத்தின் உண்மையான முகத்தையும் அந்த மக்கள் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளனர்.

நவீன தீண்டாமை

என்னதான் நாகரீக வளர்ச்சி அடைந்த சமூகம் என நாம் வெளியே சொல்லிக் கொண்டாலும், இந்தியாவில் இன்னும் ஜாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் பெரும் கொடுமைகள் அரங்கேறுவதை நம்மால் மறுக்கவே முடியாது. உயர் ஜாதியினர் தண்ணீர் குடிக்கும் பானையை தொட்ட ஒரே காரணத்தால் தாழ்த்தப்பட்ட மாணவனை ஒரு ஆசிரியர் அடித்தே கொன்றது.. கோயிலில் சாமி சிலையை தொட்ட சிறுவனை கட்டி வைத்து தீப்பந்தத்தால் அடித்தது என இந்தக் கொடுமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இவை எல்லாம் கூட வேறு மாநிலங்களில் நடந்த தீண்டாமை கொடுமைகள் என்றால், சமூக நீதியை உயர்த்திப்பிடிக்கும் தமிழகத்தில் கூட இத்தகைய சம்பவங்கள் அரங்கேறி வருவதுதான் கொடுமையிலும் கொடுமையாக இருக்கிறது. தென்காசியில் தாழ்ததப்பட்ட சமூகத்தை சேர்ந்த சிறுவர்களுக்கு பொருட்கள் தர மறுத்தது, புதுக்கோட்டையில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது போன்ற சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

புயலை கிளப்பிய “ரோகிணி”

அந்த வகையில், தற்போது மெட்ரோ சிட்டியான சென்னையிலும் இப்படியொரு தீண்டாமை கொடுமை நடந்திருப்பது தான் தமிழகம் முழுவதும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான ‘பத்து தல’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகின. சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கிலும் இந்த திரைப்படம் வெளியாகியது. அப்போது, அந்த திரைப்படத்தை பார்ப்பதற்காக கையில் டிக்கெட்டுகளுடன் சென்ற நரிக்குறவர் குடும்பங்களை ரோகிணி திரையரங்க ஊழியர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை.

டிக்கெட் இருந்தாலும் நீங்கள் எல்லாம் உள்ளே செல்லக்கூடாது எனக் கூறி அவர்களை ரோகிணி திரையரங்க நிர்வாகத்தினர் விரட்டினர். அப்போது அங்கிருந்தவர்கள், எதற்காக அவர்களை உள்ளே விட மறுக்கிறீர்கள் எனக் கேட்டு பிரச்சினை செய்துள்ளனர். இதையடுத்து, பிரச்சினை பூதாகரமாவதை உணர்ந்த ரோகிணி திரையரங்க நிர்வாகம் நரிக்குறவர் மக்களை உள்ளே அனுமதித்தது.

“நாம் மதிக்கிறோமா..?”

இதுதொடர்பான வீடியோக்கள்தான் இரண்டு நாட்களாக ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகின்றன. இந்த சம்பவத்தை முன்வைத்து அரசியல் கட்சியினர், பொதுமக்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் ரோகிணி திரையரங்க நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, ரோகிணி திரையரங்கம் மட்டுமே இதில் குற்றவாளி என்பைத போல பலரும் பேசி வரும் நிலையில், நரிக்குறவர் சமூகத்தினரிடம் ‘சமயம் தமிழ்’ சார்பாக எடுக்கப்பட்ட பேட்டியை பார்க்கும்போது நம்மில் எத்தனை பேர் அந்த சமூகத்தினரை மரியாதையாக நடத்துகிறோம் என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.

“நாயை விட கேவலமாக..”

இதுதொடர்பாக நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்களிடம், “பொதுவாக இந்த சமுதாயம் உங்களை எப்படி பார்க்கிறது?” என நாம் கேட்டிருந்தோம். அதற்கு அவர்கள் கூறிய பதில்களின் தொகுப்புதான் இது: நாயை விட கேவலமாகதான் எங்களை நடத்துவார்கள். மிகவும் அற்பமாகவே பார்ப்பார்கள். பொது இடங்களில் சிறிது கூட எங்களை மதிக்க மாட்டார்கள். எங்களை பார்த்த உடனே மூக்கை மூடிக்கொள்கிறார்கள்.

கையில் பணம் இருந்தாலும் கூட ஓட்டலுக்குள் அனுமதிக்க மாட்டார்கள். கோயிலுக்குள் செல்ல கூட எங்களை விடுவதில்லை. ஏன் எங்களை இப்படி நடத்துகிறீர்கள் எனக் கேட்டால், எச்சில் இலையில் சாப்பிடும் உங்களுக்கெல்லாம் இவ்வளவு திமிரா என்று கூறுவார்கள். நரிக்குறவர் பெண்களை தவறான நோக்கத்தில் பார்ப்பார்கள்.. இவ்வாறு நரிக்குறவர்கள் தங்களின் மனக்குமுறலை கொட்டி தீர்த்துள்ளனர்.

இழிபிறவிகள்..

ரோகிணி திரையரங்கம் மீது இன்று சேற்றை வாரி இறைப்பவர்கள், தனிப்பட்ட முறையில் தாங்கள் எவ்வாறு அந்த சமூகத்தினரிடம் நடந்துகொள்கிறோம் என சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது. படித்து பட்டங்கள் வாங்குவதாலும், கோட் சூட் அணிவதாலும் நாம் நாகரீகமானவர்கள் என அர்த்தம் கிடையாது. சக மனிதனை மனிதனாக மதிக்காத எவரும் இழிபிறவிகள்தான் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.