புதுமண வாழ்வில் புயலைக் கிளப்பிய `விக்' விவகாரம்; வாக்குவாதம்செய்த பெண்ணுக்கு, கணவனால் நேர்ந்த சோகம்

தாம்பரம் அருகேயுள்ள சோமங்கலத்தை அடுத்த அமரம்பேடு கிராமம், பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோகுலகண்ணன் (32). இவர் தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார். கோகுலகண்ணனுக்கு கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு லோகப்பிரியா என்பவருடன் திருமணம் நடந்திருக்கிறது. இந்த நிலையில் கடந்த 27-ம் தேதி லோகப்பிரியா வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டதாக சோமங்கலம் காவல் நிலையத்துக்குத் தகவல் வந்தது. உடனடியாகச் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் லோகப்பிரியாவின் சடலத்தை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் லோகப்பிரியாவின் மரணம் குறித்து போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் லோகப்பிரியா தற்கொலை செய்துகொள்ளவில்லை, கொலைசெய்யப்பட்டிருக்கிறார் என்பது தெரியவந்தது.

கோகுலகண்ணன்

இதையடுத்து மணிமங்கலம் உதவி கமிஷனர் ரவி தலைமையில் போலீஸார் லோகப்பிரியாவின் கணவர் கோகுலகண்ணன், மாமியார் ராஜேஸ்வரி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் லோகப்பிரியாவின் கொலைசெய்யப்பட்டதற்கான காரணம் தெரியவந்தது.

இது குறித்து சோமங்கலம் போலீஸாரிடம் பேசினோம். “கோகுலகண்ணனுக்கு திருமணம்செய்ய அவரின் குடும்பத்தினர் பெண் பார்த்து வந்தனர். அப்போது கோகுலகண்ணனின் வழுக்கை தலை காரணமாக அவருக்குப் பெண் கொடுக்க சிலர் முன்வரவில்லை. அதனால் கோகுலகண்ணன், தன்னுடைய வழுக்கைத் தலையை விக் (செயற்கை முடி) மூலம் மறைத்தார். லோகப்பிரியாவை பெண் பார்க்கும்போதுகூட கோகுலகண்ணன், தனக்கு வழுக்கை தலை என்று உண்மையைச் சொல்லவில்லை. திருமணத்தின்போது பந்தாவாக விக்கை வைத்து லோகப்பிரியாவையும் அவரின் குடும்பத்தினரையும் கோகுலகண்ணன் ஏமாற்றியதாகச் சொல்லப்படுகிறது.

கோகுலகண்ணனுக்கு திருமணம் முடிந்து சில தினங்களுக்கு பிறகு தலையில் எண்ணெண்ணெய் தேய்த்து குளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது மனைவி லோகப்பிரியா, எண்ணெண்ணெய் தேய்க்க முயன்றபோது கோகுலகண்ணன் மறுத்திருக்கிறார். அப்போது கோகுலகண்ணன் வெட்கப்படுவதாக லோகப்பிரியாவும் அவரின் குடும்பத்தினரும் கருதியிருக்கின்றனர். ஆனால் உண்மையை பல நாள்கள் மறைக்க முடியாது என்பதுபோல, கோகுலகண்ணனின் வழுக்கைத் தலையை ஒருநாள் லோகப்பிரியா பார்த்துவிட்டார். அதனால் மனமுடைந்த லோகப்பிரியா, `ஏன் உண்மையை மறைத்துவிட்டீர்கள்?’ என்று கோகுலகண்ணனிடம் கேட்டிருக்கிறார்.

ராஜேஸ்வரி

அதற்கு கோகுலகண்ணனும், `நீங்கள் வாக்குறுதி அளித்தபடி வரதட்சணையாக நகைகளைக் கொடுக்காமல் என்னை ஏமாற்றிவிட்டீர்கள்’ என லோகப்பிரியாவிடம் சண்டை போட்டிருக்கிறார். மேலும் கோகுலகண்ணன் ஐ.டி நிறுவனத்தில் வேலைப்பார்ப்பதாகவும் கூறியிருக்கிறார். ஆனால் அதுவும் உண்மையில்லை என லோகப்பிரியாவுக்குத் தெரியவந்திருக்கிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. சம்பவத்தன்று ஆத்திரமடைந்த கோகுலகண்ணன், மனைவி லோகப்பிரியாவைத் தாக்கியிருக்கிறார். இதில் அவர் உயிரிழந்துவிட்டார். அதனால் அதிர்ச்சியடைந்த கோகுலகண்ணன், லோகப்பிரியா உயிரிழந்த தகவலை தன்னுடைய அம்மா ராஜேஸ்வரியிடம் கூறியிருக்கிறார். இதையடுத்து இருவரும் சேர்ந்து கொலையை மறைக்க, லோகப்பிரியா தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாட முடிவுசெய்திருக்கிறார்கள். அதற்காக லோகப்பிரியாவின் சடலத்தை வீட்டில் தூக்கில் தொங்கவிட்டிருக்கிறார்கள். ஆனால் லோகப்பிரியாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் குடும்பத்தினர் புகாரளித்திருந்தனர். அதை உறுதிப்படுத்தும் வகையில் லோகப்பிரியாவின் பிரேத பரிசோதனை அறிக்கையும் வந்தது. இதையடுத்தே கோகுலகண்ணன், அவரின் அம்மா ராஜேஸ்வரி ஆகியோரைக் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறோம்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.