சென்னை, ஆழ்வார்ப்பேட்டை அபிராமபுரம் 3-வது தெருவில் திரைப்பட பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் வசித்து வருகிறார். இவர், `தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்’, `மலரே…’ போன்ற பல சினிமா பாடல்களைப் பாடி பிரபலமானவர். மாரி திரைபடத்தில் வில்லனாகவும் நடித்திருக்கிறார். இவரின் தந்தை திரைப்பட பாடகர் யேசுதாஸ். இந்த நிலையில் விஜய் யேசுதாஸின் மனைவி தர்ஷா பாலா கோபால், அபிராமபுரம் காவல் நிலையத்தில் நேற்றைய தினம் (30-ம் தேதி) புகார் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அதில், “கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி வீட்டின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த சுமார் 60 சவரன் தங்க நகைகள் மற்றும் வைர நகைகளைப் பார்த்தேன்.
பின்னர், மார்ச் மாதம் 18-ம் தேதி நகைகளை எடுக்கச் சென்றபோது அவற்றைக் காணவில்லை. நகைகளை வீட்டில் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. வீட்டில் வேலை செய்யும் மேனகா, பெருமாள், சையத் ஆகியோர்மீது சந்தேகம் இருக்கிறது. எனவே விசாரித்து நடவடிக்கை எடுப்பதோடு நகைகளை மீட்டுத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
புகாரின்பேரில் அபிராமபுரம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விஜய் ஏசுதாஸ் வீட்டுக்குச் சென்று விசாரித்தனர். கைரேகை நிபுணர்களும் வீட்டுக்குச் சென்று அங்கு கிடைத்த ரேகைகளைப் பதிவுசெய்தனர்.
சந்தேகத்தின்பேரில் போலீஸார் விஜய் யேசுதாஸ் வீட்டில் வேலை செய்பவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்புதான் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் 200 சவரன் தங்க, வைர நகைகள் திருட்டுப் போனதாகப் புகாரளிக்கப்பட்டது.

அதன்பேரில் பணிப்பெண் ஈஸ்வரி, டிரைவர் வெங்கடேசன் உட்பட மூன்று பேர் கைதுசெய்யப்பட்டதோடு, 143 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில் தற்போது திரைப்பட பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் நகைகள் திருட்டுப் போயிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.