சென்னை: தர்பார் படத்துக்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் பேரக்குழந்தைகளை எப்படி அந்த படத்தை பார்க்க அனுமதித்தீர்கள் என ரோகிணி திரையரங்க நிர்வாகத்துக்கு நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி விளாசி வருகின்றனர்.
சிம்புவின் பத்து தல படத்தை பார்க்க ஆசையுடன் டிக்கெட் எடுத்துக் கொண்டு வந்த நரிக்குறவ இன மக்களை தியேட்டருக்குள் அனுமதிக்க முடியாது என ஊழியர் செய்த செயலை நியாயப்படுத்தும் வகையில் ரோகிணி தியேட்டர் நிர்வாகம் அளித்துள்ள விளக்கம் தான் பலரையும் ஆத்திரம் அடையச் செய்துள்ளது.
ரசிகர்களின் போராட்டத்திற்கு பிறகு அவர்களை படம் பார்க்க அனுமதித்த நிலையில், தங்கள் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த சர்ச்சையே வெடித்திருக்காது என்கின்றனர்.
யுஏ சான்றிதழ் என்பதால்
நரிக்குறவ இன மக்கள் என்பதற்காகவோ அவர்களின் ஆடை மற்றும் தோற்றத்திற்காகவோ நாங்க உள்ளே அனுமதிக்க மறுக்கவில்லை என்றும் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை யுஏ படமான பத்து தல படத்தை பார்க்க சட்டப்படி அனுமதிக்க முடியாது என்பதால் அனுமதிக்கவில்லை என ரோகிணி நிர்வாகம் விளக்கம் அளித்திருந்தது.

தவறான தகவல்
யு சான்றிதழ் படத்தை குடும்பத்துடன் காணலாம் என்றும் யுஏ சான்றிதழ் படம் என்றால் சிறுவர்கள் பெற்றோர்களின் அனுமதியுடன் பார்க்கலாம் என்றும் ஏ சான்றிதழ் படங்கள் என்றால் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் மட்டுமே பார்க்க வேண்டும் என்று தான் விதி உள்ளது என நெட்டிசன்கள் பலரும் ரோகிணி தியேட்டருக்கு புத்தி சொல்லி வருகின்றனர்.

ஜிவி பிரகாஷ் முதல் விஜய்சேதுபதி வரை
பத்து தல படத்தை பார்க்க வந்து அவமதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார், நடிகர் விஜய்சேதுபதி மற்றும் பத்து தல படத்தின் ஹீரோயின் பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் ரோகிணி தியேட்டருக்கு எதிராகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ரஜினிகாந்த் பேரக்குழந்தைகள் என்றால் ஓகேவா
இந்நிலையில், இதற்கு முன்னர் பல முறை ரோகிணி தியேட்டரில் குழந்தைகளுடன் யுஏ படங்களை பார்த்திருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், யுஏ சான்றிதழ் பெற்ற நடிகர் ரஜினிகாந்தின் தர்பார் படத்தை ரஜினிகாந்தின் பேரக்குழந்தைகள் பார்த்த புகைப்படங்களை பதிவிட்டு இவர்களை மட்டும் ஏன் அனுமதித்தீர்கள் என ரோகிணி திரையரங்கை விளாசி வருகின்றனர்.

திட்டும் ரசிகர்கள்
ரோகிணி தியேட்டரில் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாகவும் உணவு பொருட்கள் விலையில் மோசடி நடப்பதாகவும், ஏகப்பட்ட புகார்களையும் அடுக்கி மனிதாபிமானமற்ற செயலை செய்து விட்டு இப்படி மோசமான ஒரு விளக்கத்தையும் கொடுக்க எப்படித்தான் மனசு வருதோ என ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.