சென்னை: சிம்பு நடித்துள்ள பத்து தல திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது.
சிம்பு ரசிகர்கள் முதல் பலரும் இந்தப் படத்தை பார்க்க ஆர்வத்துடன் திரையரங்குகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை ரோகிணி திரையரங்கில் பத்து தல படம் பார்ப்பதற்காக டிக்கெட்டுடன் சென்ற நரிக்குறவ பெண்களை அனுமதிக்கவில்லை.
இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், பாதிக்கப்பட்ட நரிக்குறவ பெண்கள் தங்களது வேதனையை வெளிப்படுத்தி உள்ளனர்.
ரோகிணி திரையரங்கில் சர்ச்சை
சிம்புவின் பத்து தல திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. கிருஷ்ணா இயக்கியுள்ள இந்தப் படத்தில் சிம்புவுடன் கெளதம் கார்த்திக், கெளதம் மேனன், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அதிக எதிர்பார்ப்புடன் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னை ரோகிணி திரையரங்கில் பத்து தல படம் பார்க்கச் சென்ற நரிக்குறவ பெண்களை, டிக்கெட்டுகள் இருந்தும் உள்ளே அனுமதிக்கவில்லை.

வேதனையுடன் பேட்டி
இந்த விவகாரம் சர்ச்சையானதால் ரோகிணி தியேட்டருக்கு எதிராக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் முதல் பலரும் கண்டனம் தெரிவித்தனர். அதன்பின்னர் அவர்களை தியேட்டர் உள்ளே படம் பார்க்க அனுமதித்த ரோகிணி நிர்வாகம், 10 வயதுக்கும் குறைவான குழந்தைகள் இருந்ததால் தான் உள்ளே விடவில்லை என விளக்கமும் கொடுத்தது. இந்நிலையில், பத்து தல படம் பார்த்துவிட்டு வெளியே வந்த நரிக்குறவ பெண்கள் இந்த சம்பவம் குறித்து பேட்டிக் கொடுத்துள்ளனர்.

எச்சி துப்பிடுவீங்க
அதாவது, நாங்கள் சென்றால் மட்டும் அங்கிருக்கும் வாட்ச்மேன் எங்களை உள்ளே விடுவதே இல்லை. டிக்கெட் எடுத்து தான் போனோம், ஆனால், உங்களை உள்ளே விட முடியாது என விரட்டிவிட்டனர். நாங்களும் உங்களை மாதிரி மனிதர்கள் தானே என கேட்டோம். அதற்கு நீங்கள் பொடி போடுவீங்க, எச்சி துப்புவீங்க அதனால உள்ளே விட முடியாது எனக் கூறிவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது முதல்முறை இல்லை
அதேபோல், இது முதல்முறை இல்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதற்கு முன்பு விஜய் படம் பார்க்கச் சென்ற போதும் எங்களை இப்படித்தான் விரட்டிவிட்டனர். குழந்தைங்க ஆசைப்படுறதால தான் நாங்களும் தியேட்டர் போறோம். ஆனா எங்களை பார்த்ததும் உள்ளே விடாம இப்படி செய்வதாக வேதனையுடன் கூறியுள்ளனர். ரோகிணி நிர்வாகத்தின் இந்த செயலுக்கு தொடர்ந்து மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு காணப்படுகிறது.