தமிழக மாவட்டம் காஞ்சிபுரத்தில் வரதட்சணை கொடுமையில் புதுப்பெண் கொலை செய்யப்பட்டு, தூக்கில் தொங்கவிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுமணப்பெண்
காஞ்சிபுரத்தின் குன்றத்தூரை அடுத்த அமரம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கோகுல கண்ணன் (32). இவருக்கும் லோகப்பிரியா என்ற பெண்ணுக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.
கோகுல கண்ணன் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாக கூறியுள்ளார். இதனால் திருமணத்தின்போது பெண் வீட்டார் 30 சவரன் நகை, ஒரு லட்சம் ரொக்கம் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வரதட்சணையாக வழங்கியதாக கூறப்படுகிறது.
திருமணம் முடிந்த சில தினங்களில் மாப்பிள்ளைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், கோகுல கண்ணன் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
அதிர்ச்சியடைந்த மனைவி
இந்த நிலையில் ஒருநாள் கணவரின் தலையைப் பார்த்து லோகப்பிரியா அதிர்ச்சி அடைந்துள்ளார். ஏனெனில் அவர் தலையில் விக் வைத்து இதுநாள் வரை ஏமாற்றி வந்துள்ளார்.
மேலும், திருமணத்திற்கு பிறகு அவர் வேலைக்கு செல்லாமல் இருந்ததால், லோகப்பிரியா அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அப்போது அவர், நீங்கள் கூறியபடி வரதட்சணை தராமல் ஏமாற்றியுள்ளீர்கள் என்று கூறி சண்டையிட்டுள்ளார்.
அதேபோல் ஐ.டியில் வேலை பார்ப்பதாக அவர் கூறியதும் பொய் என லோகப்பிரியாவுக்கு தெரிய வந்துள்ளது.
கொலை
இவற்றை அறிந்த புதுமணப்பெண் ஏமாற்றப்பட்டுவிட்டோமே என நினைத்து கதறி அழுதுள்ளார். இதற்கிடையில் வரதட்சணை குறித்து கேட்ட கோகுல் கண்ணன், தனது மனைவியை கடுமையாக தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
அதன் பின்னர் தன் தாயிடம் நடந்ததைக் கூறி, இருவரும் சேர்ந்து லோகப்பிரியாவின் சடலத்தை தூக்கில் தொங்கவிட்டுள்ளனர். தன் மனைவி தற்கொலை செய்துகொண்டதாக அவர் நாடகமாடியுள்ளார்.
பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் நடத்திய விசாரணையில் கோகுல கண்ணன் தன் மனைவியை கொலை செய்தது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து கோகுல கண்ணன் மற்றும் அவரது தாயார் ராஜேஸ்வரி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.