தஞ்சை அருகே இன்று சுற்றுலா பஸ் கவிழ்ந்து 2 பேர் பரிதாப பலி: 44 பேர் காயம்

தஞ்சை: கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து நாகை வேளாங்கண்ணிக்கு சுற்றுலா பஸ் நேற்று இரவு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. பஸ்சில் 49 பயணிகள் இருந்தனர். திருச்சூரை சேர்ந்த சமீர்(45) உள்பட 2 டிரைவர்கள் பஸ்சை ஓட்டி வந்தனர். இன்று அதிகாலை தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் ஒக்கநாடு கீழையூர் கீழத் தெருவில் ஒரு சாலை வளைவில் சாலையோர தடுப்பு சுவரில் மோதி பஸ் கவிழ்ந்தது.

இதில் பஸ்சில் பயணம் செய்த திருச்சூரை சேர்ந்த ஜோசப் மகன் ராயன்(9) மற்றும் லில்லி(63) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இவர்களது உடல்களை ஆம்புலன்ஸ் மூலமாக ஒரத்தநாடு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜின்சி(38), ரோஸ்லி(67), செபி(50), சுமா (42), சீயா (19), செபாஸ்டின்(29), வர்கீஸ்(64), ஜின்சன்(37), சிபு(48) உள்பட 44 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டிரைவரின் தூக்க கலக்கம் காரணமாக இந்த விபத்து நடந்ததாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.