தூத்துக்குடியில் ஆன்லைன் சூதாட்டம் விளையாடுவதற்காக அண்ணனிடம் 3 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு, வீட்டை விற்று தனக்கு மேலும் காசு கேட்டதால், தம்பியை அண்ணனே அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சில்லாநத்தம் பகுதியில் சேர்ந்தவர் நல்லதம்பி. லாரி ஓட்டுன இவர் ஆன்லைன் மூலம் ரம்மி விளையாடுவதை வாடிக்கையாக கொண்டு வந்துள்ளார்.
இதில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததாகவும் தெரிகிறது. மேலும் தனது அண்ணனான முத்துராஜ் இடம், பல பொய்காரணங்களை கூறி மூன்று லட்சம் ரூபாய் பணம் வாங்கியதாக தெரிகிறது.
இந்த பணத்தை நல்லதம்பி இடம் முத்துராஜ் கேட்டுள்ளார். அப்போது நம் வீட்டை விட்டு பணத்தை எடுத்துக் கொள், எனக்கு மேலும் பணம் கொடு என்று நல்லதம்பி கூறியதாக சொல்லப்படுகிறது.
ஆனால் முத்துராஜ், பூர்விக வீட்டை விற்பனை செய்ய முடியாது என்று கூறி, தனது தம்பியிடம் தகராறு செய்து உள்ளார். மேலும் என்னிடம் வாங்கிய பணத்தை வைத்து நீ என்ன செய்தாய் என்று கேள்வி எழுப்புகிறார்.
இதற்கு நல்லதம்பி எதுவும் தெரிவிக்காததால், ஆத்திரத்தில் நல்லதம்பியை காட்டு பகுதிக்கு அழைத்துச் சென்று, அடித்து, உதைத்து கொலை செய்துள்ளார் முத்துராஜ்.
இந்த சம்பவம் நேற்று மாலை அரங்கேறிய நிலையில், இன்று காலை முத்துராஜ் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். முத்துராஜ்-யை கைது செய்த போலீசார், அவரிடம் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் கொலை சம்பவம் அரங்கேறி இருப்பது பெரும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் மூன்றாவது முறையாக இயற்றியுள்ள ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.