மதுரை மாநகராட்சி மேயராக இருக்கும் இந்திராணி நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார். இவர் மேயராக பொறுப்பேற்றதில் இருந்த அமைச்சர் மூர்த்தியின் ஆதரவு கவுன்சிலர்கள் ஏதாவது ஒரு பிரச்சினையை கூட்டி வருகின்றனர். இதனால் சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் கே.என் நேரு இரு தரப்பினரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்.
இந்த நிலையில் மதுரை மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர்களில் ஒருவரான ஜெயராமனுக்கு தனி அறை ஒதுக்கவில்லை மற்றும் அவர் பதவிக்கான சலுகைகள் எதுவும் மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் வழங்கவில்லை எனக் கூறி திமுக கவுன்சிலர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் ஆளுங்கட்சி மேயர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் அதில் ஒரு அர்த்தம் இருக்கும். ஆனால் திமுக மேயருக்கு எதிராக திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர்களே போராட்டத்தில் ஈடுபடுவது வேடிக்கையாக உள்ளது.
இதனிடையே மதுரை மாநகராட்சியில் மேயர் இந்திராணியும், மாநகராட்சி ஆணையரும் பட்ஜெட் தாக்கல் செய்த பின் இந்த பிரச்சனையை பேசிக்கொள்ளலாம் என சமாதானம் செய்து திமுக கவுன்சிலர்களை சமாதானம் செய்தனர். திமுக மேயர், திமுக கவுன்சிலர்கள் இடையேயான யுத்தம் மதுரையில் மட்டுமல்ல பல மாநகராட்சிகளிலும் நடைபெற்று வருகிறது.
மதுரை, நெல்லை, கடலூர், வேலூர் ஆகிய மாநகராட்சிகளில் திமுக கவுன்சிலர்களே மேயருக்கு எதிராக செயல்பட்டு வருவது ஆளுங்கட்சியினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மதுரை மாநகராட்சியில் இன்று நடைபெற்ற களேபரம் குறித்தான தகவல் நிச்சயம் திமுக தலைமையின் கவனத்திற்கு சென்றிருக்கும். ஏற்கனவே அமைச்சர் கே.என் நேரு தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது போல இது குறித்த விசாரணையும் அறிவாலயத்தின் சீனியர் நிர்வாகிகள் தொடங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.