இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனா
சீனாவின் வூகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் பலியாகினர். இந்தியாவில் இரண்டு அலைகள் உருவாகி, பல உயிர்களை பலி கொண்டது. மேலும் பலியானவர்கள் அடக்கம் செய்ய க்யூவில் நிற்க வேண்டிய அவலமும் நிகழ்ந்தது. அதேபோல் ஆக்சிஜன். படுக்கை வசதி பற்றாக்குறையால் பலர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது.
மீண்டும் மிரட்டும் கொரோனா
இந்தநிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா அதிகரித்து, கொத்து கொத்தாக உயிரிழப்புகள் ஏற்பட்டது, உலக மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் இந்தியாவிலும் கடந்த சிலநாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சுகாதரத்துறை அமைச்சகம் கடிதம்
கடந்த சில நாட்களாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1,000, 2,000 என உயர்ந்து கொண்டிருந்தது. அதைத் தொடர்ந்து கொரோனா பரிசோதனையை அதிகரிக்குமாறும், தடுப்பூசி இயக்கத்தை அதிகப்படுத்துமாறும் ஒன்றிய சுகாதரத்துறை அமைச்சகம், மாநிலங்களுக்கு சமீபத்தில் கடிதம் எழுதியது. தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா மற்றூம் டெல்லி ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாகவும் சுகாதரத்துறை அமைச்சகம் சுட்டிகாட்டியது.
உஷார்
சுகாதார அமைச்சகம் தனது கடிதத்தில், ஒரு சில மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் நோய்த்தொற்று பரவக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும், தொற்றுநோயைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் ஆபத்து மதிப்பீடு அடிப்படையிலான அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டிய அவசியம் இருப்பதாகவும் கூறியுள்ளது. தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் இதுவரை பெற்ற வெற்றிகளை இழக்காமல் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.
3 ஆயிரத்தை தாண்டிய தினசரி பாதிப்பு
இந்தசூழலில் கடந்த ஏப்ரல் 30ம் தேதி, தினசரி கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்தது. கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,823 புதிய கோவிட் -19 வழக்குகள் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
27 சதவிகிதம் அதிகரித்தது
இது நேற்றையதை விட 27 சதவீதம் அதிகமாகும் என்று சுகாதார அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன. 24 மணி நேரத்தில் டெல்லி, ஹரியானா, கேரளா மற்றும் ராஜஸ்தானில் இருந்து தலா ஒரு மரணம் பதிவாகியுள்ளது. 18,389 இல், செயலில் உள்ள வழக்குகள் மொத்த நோய்த்தொற்றுகளில் 0.04 சதவீதம் ஆகும். தேசிய COVID-19 மீட்பு விகிதம் 98.77 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சக இணையதளம் தெரிவித்துள்ளது.
220 கோடி டோஸ் தடுப்பூசி
தினசரி பாதிக்கப்படுவோர் விகிதம் 2.87 சதவீதமாகவும், வாராந்திர நேர்மறை விகிதம் 2.24 சதவீதமாகவும் இருக்கிறது. நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,41,73,335 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் இறப்பு விகிதம் 1.19 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சகத்தின் இணையதளத்தின்படி, நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 220.66 கோடி டோஸ் கோவிட்-19 தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது.