வேலுார், சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிய மேலும் மூன்று சிறுவர்கள், சென்னையில் மீட்கப்பட்டனர்.
வேலுார், காகிதப்பட்டறையில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்தில், பல்வேறு குற்றங்கள் செய்த, 42 சிறுவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம், 27 இரவில் இல்லத்தில் இருந்த ஆறு சிறுவர்கள், மூன்று பாதுகாவலர்களை தாக்கி தப்பினர்.
வேலுார் வடக்கு போலீசார் நான்கு தனிப்படை அமைத்து, அவர்களை தேடினர். இந்நிலையில், சென்னை பூந்தமல்லியில் பதுங்கியிருந்த ஒரு சிறுவனை, தனிப்படை போலீசார் மார்ச் 31ல் பிடித்தனர்.
நேற்று முன்தினம் இரவு சென்னை, மணலியில், மூடப்பட்டிருந்த சில கடைகளின் பூட்டை உடைத்து திருட முயன்ற இரண்டு சிறுவர்களை பொதுமக்கள் பிடித்து, மணலி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அதேபோல, சென்னை கோடம்பாக்கத்தில் நேற்று காலை வழிப்பறியில் ஈடுபட்ட ஒரு சிறுவனை, போலீசார் பிடித்தனர். விசாரணையில், மூவரும் வேலுார் கூர்நோக்கு இல்லத்தில் தப்பியவர்கள் என தெரிந்தது. தனிப்படை போலீசார் அவர்களை பிடித்து, வேலுார் கூர்நோக்கு இல்லத்தில் மீண்டும் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் எதிரொலியாக, வேலுார் கூர்நோக்கு இல்லத்தில் சுற்றுச்சுவரின் உயரம் ஐந்து அடியாக அதிகரித்து, அதன் மீது இரும்பு வேலி அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.
Advertisement