வாஷிங்டன்,
அமெரிக்க முன்னாள் அதிபரான டிரம்ப் 2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து உள்ளார். தொழிலதிபரான இவர் மீது ஏற்கனவே பல பெண்கள் பாலியல் புகார்கள் தெரிவித்து உள்ளனர். 10-க்கும் கூடுதலான பெண்கள், டொனால்டு டிரம்ப் மீது பாலியல் புகார் தெரிவித்ததோடு, வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டு இருந்தனர்.
இதனிடையே ஆபாச பட நடிகை ஒருவர் டிரம்புடனனான உறவு குறித்து அவர் வெளியிட்ட புத்தகத்தில் பதிவு செய்திருந்தார். இந்த குற்றச்சாட்டை எல்லாம் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தாலும், கடந்த 2016-ம் ஆண்டு, ஜனாதிபதி தேர்தல் சமயத்தில், இந்த குற்றச்சாட்டு வெளியாகியிருந்தது. அதனால், அதன் தாக்கம் தேர்தலில் அதிகமாக எதிரொலிக்கவே செய்தது.
ஆபாச பட நடிகை விவகாரம் தான் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்கள் முன்பு, குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், கடந்த காலத்தில் ஆபாசபட பிரபலம் ஸ்டோர்மி டேனியல்ஸுடன் நெருக்கமாக இருந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதிபர் தேர்தல் நடைபெற இருந்த சூழலில் ஆபாசபட நாயகியுடனான பழக்கம் வைரலான நிலையில், அது டிரம்பிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து ஸ்டோர்மி டேனியல்ஸை பேச விடாமல் இருக்க 1 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் டிரம்ப் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. வரி மற்றும் வங்கி மோசடி உள்ளிட்ட கூட்டாட்சி பிரசார நிதி சட்டங்களை மீறியதற்காக ஆட்சி மாறியதும் டிரம்ப் மீது வழக்கு தொடரப்பட்டது
அந்த கிரிமினல் வழக்கில் டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான ஆவணங்கள் உறுதியாக உள்ளதாகவும், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் டிரம்பே தெரிவித்தது பரபரப்பானது. இந்த நிலையில் அவர் விரைவில் சரண்டர் ஆக உள்ளதாக தகவல் வெளியானது. டொனால்ட் டிரம்ப் மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் (டிஏ) அலுவலகத்தில் சரணடைவார் என்று அவரது வழக்கறிஞர் ஜோ டகோபினா தெரிவித்தார்.
இந்த வழக்கு மன்ஹாட்டன் குற்றவியல் நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் நீதிமன்றம் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவுடன் சரணடைய டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
அவர் நீதிமன்றத்தில் சரணடைய உள்ளதால் நியூயார்க் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மன்ஹாட்டன் நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. நீதிமன்றத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன. வி.ஐ.பி.க்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். நீதிமன்றம் செல்லும் சாலைகளில் ஏராளமான ஆயுதம் ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில், புளோரிடாவில் இருந்து நியூயார்க் நகருக்கு டிரம்ப் நேற்று வந்தடைந்து உள்ளார். வந்ததும் தனது ட்ரூத் சமூக ஊடக பக்கத்தில், நமது நாட்டை நாம் மீண்டும் திரும்ப எடுத்து கொள்ள வேண்டும். அமெரிக்காவை மீண்டும் பெரிய நாடாக்க வேண்டும் என பதிவிட்டார். அவர் தனது பிரசாரத்திற்கு நன்கொடை அளிக்கும்படி ஆதரவாளர்களை வலியுறுத்தியும் உள்ளார்.
இதனை தொடர்ந்து, டிரம்ப் இன்று மதியம் கோர்ட்டில் ஆஜராக திட்டமிட்டு உள்ளார். இதனை முன்னிட்டு கோர்ட்டில் அவரது வழக்கறிஞர்கள் கூறும்போது, வீடியோ பதிவு செய்வதோ, புகைப்படம் எடுப்பது மற்றும் ரேடியோ கவரேஜ் செய்வதோ கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஏற்கனவே சர்க்கஸ் கூடாரம் போன்று நிலைமை தலைகீழாக உள்ளது. இந்த வழக்கில், அது நிலைமையை இன்னும் மோசமடைய செய்ய கூடும் என வாதிட்டனர். இந்த சூழலில், அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் கைரேகை, புகைப்படம் ஆகியவை கோர்ட்டில் இன்று பதிவு செய்யப்பட உள்ளன.
டிரம்பும் அவரது ஆதரவாளர்களும் இந்த வழக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என கூறியுள்ளனர். இந்த சூழலில், அதிபர் வேட்பாளராக டிரம்பை ஆதரிப்பதற்கு, மார்ச் 14-20 காலகட்டத்தில் எடுத்த சர்வேயில் 44 சதவீதம் என்றிருந்த ஆதரவு நிலையானது, குடியரசு ஆதரவாளர்களால் தற்போது 48 சதவீதம் என உயர்ந்து உள்ளது.
டிரம்புக்கு அடுத்து, அக்கட்சியில் 2-வது இடத்தில் உள்ள புளோரிடா கவர்னர் ரான் திசான்டிஸ் என்பவருக்கான ஆதரவு 30 சதவீதத்தில் இருந்து 19 சதவீதத்திற்கு சரிந்து உள்ளது. இதனால், இந்த வழக்கின் முடிவு, 2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் எந்தளவுக்கு தாக்கம் ஏற்படுத்தும் என்பது பொறுத்திருந்து காண வேண்டியுள்ளது.