புதுடில்லி, இந்திய நீதித்துறை அறிக்கையின்படி, நீதிமன்றங்களை மக்கள் அணுகுவதற்கான வாய்ப்பை சிறப்பாக அளிக்கும் மாநிலங்களில், கர்நாடகா முதலிடத்தில் உள்ளது. முதல் ஐந்து மாநிலங்களில் தமிழகம் உட்பட, நான்கு தென் மாநிலங்கள் உள்ளன.
‘டாடா’ அறக்கட்டளை சார்பில், ௨௦௧௯ல் இருந்து, இந்திய நீதி அறிக்கை வெளியிடும் முயற்சி துவங்கியது. இதன்படி இதன் மூன்றாவது அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
கடந்த ௨௦௨௨ம் ஆண்டுக்கான இந்த அறிக்கையில், நீதிமன்றங்களை மக்கள் அணுகுவதற்கான வாய்ப்புகள், அங்குள்ள கட்டமைப்பு வசதிகள், காலி பணியிடங்கள், சட்ட உதவி வாய்ப்புகள், காவல் துறை, சிறைகள், மனித உரிமை கமிஷன்கள் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், சிறந்த மாநிலங்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பட்ஜெட் குறைவு
இதன்படி, மக்கள் நீதிமன்றங்களை அணுகுவதற்கான வாய்ப்பை சிறப்பாக அளிக்கும் மாநிலங்களில், கர்நாடகா முதலிடத்தில் உள்ளது. தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. மிகச்சிறந்த ஐந்து மாநிலங்களில், நான்கு தென் மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.
மூன்றாவது இடத்தில் தெலுங்கானா, நான்காவது இடத்தில் குஜராத், ஐந்தாவது இடத்தில் ஆந்திரா உள்ளன.
அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
ஒரு கோடி பேருக்கு மேல் மக்கள்தொகை உள்ள, ௧௮ நடுத்தர மற்றும் பெரிய மாநிலங்கள் பட்டியலில் கர்நாடகா முதலிடத்தில் உள்ளது.
அதே நேரத்தில், ஒரு கோடி பேருக்கு குறைவான மக்கள்தொகை உள்ள, ஏழு சிறிய மாநிலங்கள் பட்டியலில், சிக்கிம் முதலிடத்தில் உள்ளது. அருணாச்சல பிரதேசம், திரிபுரா அதற்கடுத்த இடங்களில் உள்ளன.
சட்ட கமிஷனின், ௧௯௮௭ம் ஆண்டு பரிந்துரையின்படி, ௨௦௦௦ம் ஆண்டில், ௧௦ லட்சம் மக்கள்தொகைக்கு, ௫௦ நீதிபதிகள் இருக்க வேண்டும். ஆனால், தற்போது, ௧௦ லட்சம் மக்கள்தொகைக்கு, ௧௯ நீதிபதிகளே உள்ளனர்.
நீதி நடைமுறை சிறப்பாக இல்லாததற்கு, அதற்காக ஒதுக்கப்படும் பட்ஜெட் மிகவும் குறைவாக இருப்பதே முக்கிய காரணமாகும். புதுடில்லி மற்றும் சண்டிகரை தவிர வேறு எந்த பிரதேசமும், தன் ஆண்டு பட்ஜெட்டில், 1 சதவீதத்துக்கு மேல், நீதித் துறைக்கு ஒதுக்குவதில்லை.
நீதித் துறை, சிறை, காவல் துறை ஆகியவற்றை நவீனப்படுத்த மத்திய அரசு அளிக்கும் நிதியை, எந்த ஒரு மாநிலமும் முழுமையாக பயன்படுத்தவில்லை. மேலும் மாநில பட்ஜெட்களிலும் ஒதுக்கீடு அதிகரிக்கப்படவில்லை.
காலி இடங்கள்
காலி பணியிடங்கள் அதிகம் இருப்பது மற்றொரு முக்கிய பிரச்னையாகும். காவல் துறை, சிறைத் துறை, சட்ட உதவி மையங்களில் காலியிடங்கள் அதிகமாக உள்ளன. ௧௪௦ கோடி மக்கள்தொகைக்கு, ௨௨ ஆயிரத்து ௭௬ நீதிபதிகளே உள்ளனர்.
அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில், ௨௨ சதவீதம் காலியாக உள்ளன. உயர் நீதிமன்றங்களில், ௩௦ சதவீதம் அளவுக்கு நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.
காவல் துறையிலும் காலியிடங்கள் அதிகளவில் உள்ளன. சர்வதேச தரத்தின்படி, ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு, ௨௨௨ போலீசார் இருக்க வேண்டும். ஆனால், நம் நாட்டில், ௧௫௨.௮ போலீசார் தான் உள்ளனர்.
காவல் துறையில், கடந்த ௧௦ ஆண்டுகளில் பெண்கள் சேர்க்கப்படுவது இரட்டிப்பாகியுள்ளது. அதே நேரத்தில் ஒட்டுமொத்தமாக, ௧௧.௭௫ சதவீத பெண்களே உள்ளனர். அதிகாரிகள் நிலையில், ௮ சதவீதம் பேர் பெண்கள். உயர் நீதிமன்றங்களில், ௧௩ சதவீதம், கீழ் நீதிமன்றங்களில், ௩௫ சதவீதம் அளவுக்கே பெண்கள் உள்ளனர். சிறை துறையில், ௧௩ சதவீதம் பேர் பெண்கள்.
சிறைகளில், ௧௩௦ சதவீதம் அளவுக்கு கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், ௭௭ சதவீதம் பேர் விசாரணை கைதிகளாக உள்ளனர். ௩௦ சதவீத சிறைகளில், ௧௫௦ சதவீதத்துக்கும் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அதுபோல, ௫௪ சதவீத சிறைகளில், ௧௦௦ சதவீதம் அளவுக்கு கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
நியமனங்கள்
காவல் துறையில், எஸ்.சி., – எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீட்டின் படியான நியமனங்கள் கர்நாடகாவில் மட்டுமே நடந்துள்ளன. மற்ற மாநிலங்களில் இந்த இடஒதுக்கீட்டின்படி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.
உயர் நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளில், நான்கில் ஒன்று, ஐந்து ஆண்டுகளுக்கு மேற்பட்டதாக உள்ளது. அதுபோல, ௧௧ மாநிலங்களில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில், நான்கில் ஒரு வழக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு மேற்பட்டதாக உள்ளது. நாடு முழுதும், ௪.௮ கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.