புதுடெல்லி: வரலாறு பாடப் புத்தகத்தில் இருந்து முகலாயர்கள் பகுதி நீக்கப்படவில்லை என்று NCERT இயக்குநர் தினேஷ் பிரசாத் சக்லானி தெரிவித்துள்ளார்.
வரும் 2023-24 கல்வி ஆண்டு முதல் கற்பிக்கப்பட இருக்கும் 12ம் வகுப்பு மாணவர்களுக்காக NCERT தயாரித்துள்ள புதிய வரலாற்று பாடப்புத்தகத்தில் இருந்து முகலாயர்களின் வரலாறு நீக்கப்பட்டதாக செய்தி வெளியானது. இந்நிலையில், இது குறித்து NCERT-ன் இயக்குநர் தினேஷ் பிரசாத் சக்லானி கூறி இருப்பதாவது: ”12ம் வகுப்பு மாணவர்களுக்காக NCERT தயாரித்துள்ள வரலாற்று பாடப்புத்தகத்தில் இருந்து முகலாயர்கள் வரலாறு நீக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மையல்ல. அது ஒரு பொய்.
கரோனா தொற்று காரணமாக மாணவர்களுக்கு ஏற்பட்ட அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கில் கடந்த ஆண்டு பாடத்திட்டங்களை குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதற்காக ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு அளித்த பரிந்துரையில், மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்குத் தேவையான பாடங்களை நீக்கக் கூடாது என்றும், சுமையாக உள்ள பகுதிகளை நீக்கலாம் என்றும் தெரிவித்தது.
தேசிய கல்விக் கொள்கையின் வழிகாட்டல்படி நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். மாணவர்களுக்கான பாடச்சுமையை குறைக்க வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது. நாங்கள் அதனை அமல்பபடுத்துகிறோம். பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. அது விரைவில் இறுதி செய்யப்படும்.
தேசிய கல்விக் கொள்கையின்படி பாடப்புத்தகங்கள் 2024-ல் அச்சிடப்படும். தற்போதைக்கு நாங்கள் எதையும் கைவிடவில்லை. முகலாயர்களின் வரலாற்றை பாடப் புத்தகத்தில் இருந்து NCERT நீக்கவிட்டதாக எழுந்துள்ள விவாதம் தேவையற்றது. இது குறித்து தெரியாதவர்கள், பாடப் புத்தகத்தைப் பார்த்துக்கொள்ளலாம்” என்று NCERT இயக்குநர் தினேஷ் பிரசாத் சக்லானி தெரிவித்துள்ளார்.