சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடித்தமான நிகழ்ச்சியாக உள்ளது. மனக்கவலையை மறக்கவைத்து வயிறு வலிக்க சிரிக்க கைக்கும் இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கோமாளிகள் செய்யும் சேட்டைகள் பார்த்து ரசிப்பதற்காகவே பலர் இதை தொடர்ந்து பார்த்து வருகின்றனர்.
குக்வித் கோமாளி
குக்வித் கோமாளி நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்கள் முடிந்துள்ள நிலையில் நான்வது சீசன் கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. இதில் சமையல்கலை வல்லுநர்களான செஃப் தாமு, செஃப் வெங்கடேஷ் ஆகியோர் நடுவர்களாக மட்டுமல்லாமல், காமெடியையும் செய்வதால் ரசிகர்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு உள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் இரவு 9.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

சுவாரஸ்யமாக்கிய கோமாளிகள்
இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி முதல் சீசனில் வனிதா விஜயகுமாரும், இரண்டாவது சீசனில் கனியும், மூன்றாவது சீசனில் ஷ்ருதிகா வெற்றி பெற்றார். இந்த மூன்று சீசன்களும் கோமாளிகளாக புகழ், பாலா, மணிமேகலை, சுனிதா, ஷிவாங்கி, குரேஷி ஆகியோர் கோமாளிகளாக இருந்து நிகழ்ச்சியை சுவாரசியமாக ஆக்கினர்.

குக் வித் கோமாளி சீசன் 4
தற்போது ஒளிபரப்பாகி வரும் நான்காவது சீசனில் விசித்ரா, ஷெரின், மைம் கோபி, கிஷோர், காளையன், ஸ்ருஷ்டி டாங்கே, ராஜ் அய்யப்பா, விஜே விஷால், சிவாங்கி, ஆன்டிரியான் ஆகியோர் குக்காக இருந்தனர். இதில் கிஷோர் முதல் நபராக வெளியேறினார். இதையடுத்து, காளையன்,ராஜ் அய்யப்பா மற்றும் கோமாளி மணிமேகலை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அவர் கர்ப்பமாக இருப்பதால் வெளியேறிவிட்டதாக கூறப்பட்டது. ஆனால், அந்த தகவலை மணிமேகலை மறுத்துவிட்டார்.

குக்குகளின் சம்பளம்
இந்நிலையில், குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதில், 90களில் மடிப்பு அம்சா என அடைமொழியோடு கொடி கட்டிப்பறந்த நடிகை விசித்ராவுக்கு 20 முதல் 30 ஆயிரம் வரை ஒரு எபிசோடுக்கான சம்பளமாக வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மைம் கோபிக்கு அதிக சம்பளம்
கடந்த மூன்று சீசனாக கோமாளியாக இருந்த ஷிவாங்கி இந்த சீசனில் குக்காக மாறி இருக்கிறார். இவருக்கு, 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுவதாகவும், பிரஞ்சு நடிகையான ஆன்டிரியாவுக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விஜே விஷாலுக்கு 20 முதல் 25 ஆயிரமும், ஸ்ருஷ்டி டாங்கேவுக்கு 25 முதல் 35 ஆயிரமும், ராஜ் அய்யப்பாவுக்கு 20 முதல் 26 ஆயிரமும், மைம் கோபிக்கு 40 முதல் 50 ஆயிரமும், ஷெரினுக்கு 30 முதல் 35 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதில், மைம் கோபிக்குத்தான் அதிகமான சம்பளம் வழங்கப்படுகிறது.