வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை இன்னும் ஒரு மாதத்தில் சட்டமாக கொண்டு வரவில்லை என்றால், இந்தியாவே பார்த்திராத ஒரு போராட்டம் நடக்கும் என்று, பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிவித்துள்ளார்.
இன்று சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பாமக கொடி ஏற்றி வைத்தபின் பேசிய அன்புமணி இராமதாஸ், “வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை இன்னும் ஒரு மாதத்தில் சட்டமாக கொண்டு வாருங்கள். உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது.
வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுக்க இந்த தடையும் உச்சநீதிமன்றம் விதிக்கவில்லை. நியாயமான காரணங்களை மட்டுமே அவர்கள் கேட்கிறார்கள். இதற்குண்டான தரவுகளை எடுப்பதற்கு ஆறு மணி நேரம் தான் ஆகும். ஆனால் அதை எடுப்பதற்கு இவர்களுக்கு ஒரு வருடமாக மனது வரவில்லை.
தயவு செய்து தமிழக முதலமைச்சர் அவர்கள் இன்னும் ஒரு மாதத்திற்குள் வன்னியர்களுக்கான இட ஒதுக்கட்டை கொடுங்கள். இல்லையேல் என்னுடைய தம்பிகளை என்னால் கட்டுப்படுத்த முடியாது. ஏனென்றால் இது சமூக நீதிப் பிரச்சனை. ஜாதி பிரச்சனை கிடையாது.
நீங்கள் தானே சொன்னீர்கள் சமூக நீதி என்றால் திமுக என்று. ஒரு வருஷம் ஆகியும் உங்களால் இந்த சமூகநீதி பிரச்னையை தீர்க்க முடியவில்லை. நினைத்துப் பாருங்கள்.
என்னுடைய தம்பிகள் போராட்டத்துக்கு தயாராகி விட்டார்கள். அப்போது நடந்த போராட்டம் வேறு, இப்போது நடந்தால் வேறு விதமாக நடக்கும். இந்தியா பார்க்காத ஒரு போராட்டம் தமிழ்நாட்டில் நடக்கும். அதை தவிர்க்க வேண்டும் என்றால், நாங்கள் கேட்கின்ற சமூகநீதி பிரச்சினையை தீர்த்து வையுங்கள். வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டை கொடுங்கள்” என்று அன்புமணி இராமதாஸ் பேசினார்.