ஓடிடியில் 7ம் தேதி வெளியாகும் 'அயோத்தி': அதிகாரபூர்வ அறிவிப்பு

சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் 'அயோத்தி'. அறிமுக இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சசிகுமார், ப்ரீத்தி அஸ்ரானி, யஷ்பால் ஷர்மா மற்றும் புகழ் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் தற்போது ஜீ5 ஓடிடி தளத்தில் வருகிற 7ம் தேதி முதல் வெளியாகிறது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் படத்தை தவற விட்டவர்களுக்கு நல்ல வாய்ப்பாக இது அமைந்திருக்கிறது.

அயோத்தியிலிருந்து ராமேஸ்வரத்திற்குச் சுற்றுலா செல்ல முடிவெடுக்கும் நான்கு பேர் கொண்ட குடும்பத்தைச் சுற்றி இப்படத்தின் கதை சுழல்கிறது. மதுரையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் கார் பயணத்தின்போது, ஆணாதிக்க சிந்தனை கொண்டவரான பல்ராம் (யஷ்பால்) ஓட்டுநரிடம் தவறாக நடந்து கொள்கிறார், இருவருக்குமான வாக்குவாதத்தால் ஏற்படும் விபத்து, பல்ராமின் மனைவியின் மரணத்திற்கு வழிவகுத்து விடுகிறது.
சுயநலமிக்க தந்தையிடம் சிக்கி அவரது மகளும், மகனும் படும் துன்பங்களும், டிரைவரின் நண்பர்களான சசிகுமார் மற்றும் புகழ் ஆகியோர் தாயின் சடலத்தை எடுத்துச் செல்ல குழந்தைகளுக்கு உதவுவதையும் சித்தரிக்கிறது. எல்லா முரண்பாடுகளையும் மீறி அவர்களின் சொந்த ஊருக்கு எப்படிச் செல்கிறார்கள் என்பதே படம். மதங்களைத் தாண்டிய மனிதநேயம் சொல்லும் காவியமாக இப்படம் அனைத்து தரப்பினராலும் பாராட்டுக்களைக் குவித்தது.

படம் ஓடிடியில் வெளியாவது குறித்து சசிகுமார் கூறியதாவது: மனித நேயம் பேசும் ஒரு அழகான காவியமான “அயோத்தி” படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமை அடைகிறேன். இப்படம் மனித உணர்வுகளின் சரியான கலவையைக் கொண்டுள்ளதோடு வாழ்க்கை என்ற இந்தப் பயணத்தில் உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும்.

திரையரங்கில் பாராட்டுக்களைப் பெற்ற இப்படம், இன்னும் பெரிய அளவிலான பார்வையாளர்களைச் சென்றடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 190 நாடுகளில் பார்வையாளர்களைக் கொண்டிருக்கும் தளத்தில் இப்படம் வெளியிடப்படுவது மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. அயோத்தி படம் மூலம் ரசிகர்கள் ஒரு அழகான அனுபவத்தைப் பெறுவார்கள், என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.