கிச்சா சுதீப்பின் பா.ஜ.க. ஆதரவு முடிவால் அதிர்ச்சியுற்றேன்: நடிகர் பிரகாஷ் ராஜ்

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற மே 10-ந்தேதி ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கப்பட உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. ஆட்சியை தக்க வைக்க ஆளும் பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் போட்டி போட்டு திட்டங்களை வகுத்து வருகின்றன.

இந்த நிலையில், பிரபல கன்னட நடிகரான கிச்சா சுதீப், பா.ஜ.க.வில் இணைய இருக்கிறார் என தகவல் வெளியானது. நடிகர் சுதீப் மட்டுமின்றி இன்னும் பல பிரபலங்களை தங்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய பா.ஜ.க. சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றும் தகவல் கசிந்துள்ளது.

ஏற்கனவே கடந்த மாதம் தனக்கு அரசியல் அழைப்புகள் வருகின்றன என்று நடிகர் சுதீப் தெரிவித்திருந்த நிலையில், பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரபலங்கள் அவரை சந்தித்து பேசியிருந்தது பெரிதளவில் பேசப்பட்டது.

இந்த நிலையில், அவர் பெங்களூரு விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, பா.ஜ.க.வுக்கு நான் தேர்தல் பிரசாரம் மட்டுமே செய்வேன் என கூறியுள்ளார்.

சட்டசபை தேர்தலில் ஒரு வேட்பாளராக அவர் போட்டியிடுவது பற்றிய யூகங்களுக்கு பதிலளித்த சுதீப், சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை நடிகர் கிச்சா சுதீப் இன்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது பேசிய முதல்-மந்திரி, சுதீப் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர். எனக்கு ஆதரவை அவர் தெரிவித்து உள்ளார். எனக்கு அளித்த ஆதரவானது கட்சியையும் (பா.ஜ.க.) அவர் ஆதரிக்கிறார் என்றே அர்த்தம் ஆகும் என்று கூறியுள்ளார்.

இதுபற்றி நடிகர் பிரகாஷ் ராஜ் கூறும்போது, பா.ஜ.க.வுக்கு ஆதரவு வழங்கிய கிச்சா சுதீப்பின் அறிக்கையை அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன் என கூறியுள்ளார்.

கர்நாடகாவில் தோல்வி முகம் காண கூடிய மற்றும்நம்பிக்கையற்ற பா.ஜ.க.வால் பரப்பப்படும் போலியான செய்தியாக இது இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன் என இன்று காலை தனது டுவிட்டர் பதிவில் வெளியிட்டார்.

வலையில் சிக்காத வகையில் அதிக உணர்வுள்ள குடிமகன் கிச்சா சுதீப் என்றும் அதில் அவர் பதிவிட்டார். இந்த நிலையில், பா.ஜ.க.வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை சுதீப் எடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என பிரகாஷ் ராஜ் வேதனை தெரிவித்து உள்ளார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் தொடர்ந்து பா.ஜ.க. அரசுக்கு எதிரான விமர்சனங்களை கூறி வருகிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக சுயேச்சையாக போட்டியிட்ட அவர் தோல்வி கண்டார்.

எனினும், பா.ஜ.க. அரசுக்கு எதிராக தொடர்ந்து விமர்சனங்களை வெளியிட்டு வருகிறார். பா.ஜ.க.வுக்கு எதிரான அவரது நிலைப்பாட்டால், சக நடிகர்கள் அவருடன் பேசுவதற்கு கூட பயப்படுகிறார்கள் என பேட்டி ஒன்றில் கூறும்போது நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

எனது அரசியல் நடவடிக்கைகளால் எனது பணி பாதிக்கப்படுகிறது என கூறிய அவர், அதற்காக அரசியலை தூக்கி வீசிவிட முடியாது என்றும் அப்போது கூறினார். வேண்டுமென்றால் நான் எனது பணியை விட்டு ஒதுங்கியிருக்கலாம். அந்த அளவுக்கு வசதியும், வலிமையும் எனக்கு இருக்கிறது என்றும் அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.