வீட்டை இடிக்கும் போது கிடைச்ச புதையல் பெட்டி? கடைசியில் பகீர்… ஆந்திராவில் டுபாக்கூர் சண்டை!

ஆந்திர மாநிலம் குர்னூல் மாவட்டம் தேவனகொண்டா அருகே கரிவேமுலா கிராமம் அமைந்துள்ளது. இங்கு வசித்து வருபவர் கிருஷ்ணா. இவரிடம் இருந்த பழைய வீட்டை அதே பகுதியை சேர்ந்த நரசிம்மலு என்பவருக்கு ஓராண்டிற்கு முன்பு விற்பனை செய்தார். இந்நிலையில் போதிய நிதி ஆதாரம் கிடைத்த நிலையில் பழைய வீட்டை இடித்து விட்டு புதிய வீடு கட்டுவதற்கான வேலைகள் தொடங்கப்பட்டன.

மண்ணுக்குள் கிடைத்த பீரோ

முதலில் கடைக்கால் தோண்டப்பட்டது. அப்போது யாரும் எதிர்பாராத வகையில் மண்ணுக்குள் இருந்து இரும்பு பீரோ ஒன்று கிடைத்தது. அதன் முன்புறம் லட்சுமி படம் இருந்தது. மேலும் அதிக எடை கொண்டதாக காணப்பட்டது. இதைக் கண்டதும் உள்ளே புதையல் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டது. அதாவது விலை மதிப்புள்ள நகைகள் இருக்கக் கூடும் எனப் பலரும் கூற ஆரம்பித்தனர்.

குவிந்த ஊர்மக்கள்

இந்த விஷயம் தீயாய் பரவியதும் ஊர் மக்கள் குவிந்தனர். தகவல் கிடைத்ததும் ஓடிவந்த கிருஷ்ணா, தனது முன்னோர்கள் வசித்த இடம் என்பதால் அங்கிருந்த பெட்டியும் தனக்கே சொந்தம் என உரிமை கொண்டாடினார். ஆனால் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் சென்றுள்ளது. உடனே வருவாய்த்துறை அதிகாரிகள் கரிவேமுலா கிராமத்திற்கு வந்தனர்.

யாருக்கு அந்த புதையல்

அவர்கள் பெட்டியில் இருக்கும் விலை மதிப்பற்ற பொருட்கள் அரசுக்கே சொந்தம் எனத் திட்டவட்டமாக குறிப்பிட்டனர். நரசிம்மலு வீட்டின் முன்பாக பெரும் கூட்டமே திரண்டது. இவ்வாறு வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கையில், பீரோவை உடைத்து திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஊர் மக்கள் முன்னிலையில் வெல்டிங் செய்து கதவு திறக்கப்பட்டது.

ஒருமணி நேரம் ஆச்சு

உள்ளே அப்படி என்ன தான் இருக்குமோ? என்ற ஆர்வம் பலருக்கும் இருந்தது. இவை அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இரும்பு பெட்டியை திறக்க ஒருமணி நேரம் தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பெட்டி திறக்கப்பட்ட போது ஊர் மக்கள் ஆரவார ஒலி எழுப்பினர். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அனைவரும் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். ஏனெனில் அதன் உள்ளே பழைய காகிதங்களும், செல்லாத ஓரணா நாணயங்களும் இருந்தன.

கடைசியில் ஏமாற்றம்

இதை பார்த்ததும் ஏமாற்றத்துடன் அனைவரும் கிளம்பி சென்றனர். அதன்பிறகு அந்த பொருட்களுக்கு யாருமே சொந்தம் கொண்டாட முன்வரவில்லை. இவற்றை வேண்டாம் என்று கூறிவிட்டு கிருஷ்ணா நடையை கட்டினார். காகிதங்களையும், ஓரணா நாணயத்தையும் நான் என்ன செய்வேன்? என்று கேட்பது போல் நரசிம்மலு காணப்பட்டார். புதையலை எதிர்பார்ப்பு பல்பு வாங்கிய நிகழ்வு குறித்த வீடியோவும், செய்தியும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.